காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
நெல்லை அருகே குடிநீர் வழங்கக்கோரி, காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெண்கள் சாலைமறியல்
நெல்லை அருகே தூத்துக்குடி மாவட்ட எல்லையில் உள்ள வல்லநாடு பஞ்சாயத்து பார்வதி அம்மன்புரம் பகுதியில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று அந்த பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.
இந்தநிலையில் அவர்கள் நேற்று காலை 9.30 மணியளவில் வல்லநாடு நான்கு வழிச்சாலையில் கலியாவூர்-ஸ்ரீவைகுண்டம் ரோடு சந்திப்பு பகுதியில் அமர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து சீரான குடிநீர் வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நான்கு வழிச்சாலையில் வந்த அனைத்து வாகனங்களும் ஒருவழிப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
உடனே தூத்துக்குடி புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராமன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவகுமார், வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திரமுருகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், ''பார்வதி அம்மன்புரத்துக்கு நேரடியாக குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் தனி பைப்-லைன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகளும் தொடங்கப்பட்டு நிறைவுபெறும் நிலையில் உள்ளது. விரைவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு சீராக குடிநீர் வழங்கப்படும்'' என்று தெரிவித்தனர்.
1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து மறியலை கைவிட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த வழியாக சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காலையில் நடந்த திடீர் சாலைமறியலால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள், அலுவலகத்துக்கு சென்ற பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் அவதியடைந்தனர்.