குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
x

களக்காடு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள வடக்குபுளியங்குளத்தில் கடந்த 4 மாதங்களாக ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் சப்ளை வழங்கப்படவில்லை. இதுபோல தாமிரபரணி கூட்டு குடிநீரும் சீராக வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டு நேற்று களக்காடு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

களக்காடு யூனியன் ஆணையாளர்கள் கோபாலகிருஷ்ணன், மங்கள கோமதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே அவர்கள் களக்காடு யூனியன் அலுவலகம் முன்பு பணகுடி-சேரன்மாதேவி பிரதான சாலையில் அமர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த வழியாக போக்குவரத்து தடைபட்டது. பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்து விரைந்து வந்த களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சமால், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் யூனியன் ஆணையாளர்கள், ஏர்வாடி வருவாய் ஆய்வாளர் கந்தசாமி ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், வடக்கு புளியங்குளத்திற்கு ஆய்வு நடத்த குழு சென்றுள்ளதாகவும், உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.


Next Story