ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்


ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
x

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு புகார் தொடர்பாக, தேவரப்பன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்

முறைகேடு புகார்

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள தேவரப்பன்பட்டி ஊராட்சியில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தேவரப்பன்பட்டி ஊராட்சியை சேர்ந்த பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் 80-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தாங்கள் பணிபுரிந்த நாட்களை விட குறைவான நாட்கள் பதிவு செய்திருப்பதாக புகார் எழுந்தது.

குறிப்பாக 50 நாட்கள் வேலை செய்துள்ள பெண்கள், 20 நாட்கள் மட்டுமே வேலை பார்த்ததாக பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள், நேற்று திடீரென தேவரப்பன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.

சர்வர் கோளாறு

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி, வேலை பார்த்த நாட்களை சரியாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தினால் தேவரப்பன்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், கடந்த சில நாட்களாக இந்த திட்டத்தில் பணிபுரிந்த நாட்களை பதிவு செய்யும் கணிணியில் சர்வர் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக சரியாக பதிவு செய்ய முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் கோளாறு சரிசெய்யப்பட்டு, வேலை பார்த்த நாட்கள் சரியாக கணக்கிடப்பட்டு சம்பந்தபட்டவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றனர்.


Next Story