ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x

100 நாள் வேலை முறையாக வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

முற்றுகை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே ஆயிப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களில் 20 பேரின் அட்டைகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் என ஊராட்சி பணியாளர்கள் சீல் வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மற்ற பெண் பணியாளர்களுக்கு அரசின் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை கிடைக்காமல் போகப்போகிறது என தகவல் பரவி உள்ளது.

மேலும் அந்த ஊராட்சிக்கு உட்பட்ட பெண்களுக்கு 100 நாள் வேலை முழுமையாக வழங்காமல் வருடத்தில் 9 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. எனவே முறையாக வேலை வழங்கக்கோரி ஆயிப்பட்டி கிராம பெண்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குறுதி

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவதி, ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அட்டைகளில் சீல் வைக்கப்பட்டதால் பெண்களுக்கான உரிமைத் தொகை கிடைக்காது என்பது தவறான தகவல். அதேபோல் அனைத்து நபர்களுக்கும் 100 நாள் வேலை முறையாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். அதன்பேரில் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பெண்கள் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இன்று வரை 9 நாட்கள் மட்டுமே வேலை கொடுத்துள்ளதாகவும், ரூ.200 மட்டும் ஊதியம் கொடுப்பதாகவும், சட்டபூர்வமாக 100 நாள் வேலை பணியாளர்களுக்கு ரூ.294 ஊதியம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை ஆண்டுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று கூறினர்.


Next Story