பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
சீராக குடிநீர் வழங்க கோரி பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி 32-வது வார்டு பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெரு, ஜோதிபுரம், எரிபத்தநாயனார் தெரு, எம்.ஜி.ஆர். காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் சீராக வழங்கப்படவில்லை என்றும், புதுப்பேட்டை தெரு பகுதியில் குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு 10 நாட்களுக்கு மேலாக அங்கு தண்ணீர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அந்த பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் கவுன்சிலர் அனுராதா, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் தலைமையில், பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்திற்கு திரண்டு வந்து, தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே மண்டல தலைவர் பிரான்சிஸ், உதவி ஆணையாளர் ஜஹாங்கிர் பாட்ஷா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விரைவில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.