கடன் செயலியால் பாதிப்படைந்த பெண்கள்


கடன் செயலியால் பாதிப்படைந்த பெண்கள்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடன் செயலியால் பாதிப்படைந்த பெண்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.

புதுக்கோட்டை

ஆன்லைன் மோசடி

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் கிரைம்களும் அதிகரித்தபடி உள்ளது. ஆன்லைன் மோசடி, பரிசு பொருட்கள் விழுந்திருப்பதாகவும், குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், வீட்டில் இருந்தபடியே வேலைவாய்ப்பு என ஆசைவார்த்தை கூறி மர்மநபர்கள் செல்போனில் குறுந்தகவல், வாட்ஸ்-அப்பில் லிங்க் அனுப்பி பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்து வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த மோசடியில் ஈடுபடும் மர்மநபர்களை பிடிக்க சைபா் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறதில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மோசடி தொடர்பாக உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் பறிபோன பணத்தை வங்கிகள் மூலம் தடுத்து நிறுத்தி மீட்டும் வருகின்றனர். மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

கடன் செயலி

இந்த நிலையில் செல்போனில் கடன் செயலியை பதிவிறக்கம் செய்து கடன் பெறுபவர்களின் தகவல்கள் திருடப்பட்டு, அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவமும் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் கடன் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ரூ.5 ஆயிரம் கடனுக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைத்து விட வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்.

செயலியை பதிவிறக்கம் செய்யும் போது அவர்களது செல்போனில் உள்ள எண்கள் மற்றும் பிற தகவல்கள் மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டு விடுகிறது. இதில் கடன் பெறுபவர்கள் பற்றி அவர்களது புகைப்படத்துடன் ஆபாசமாகவோ அல்லது அவரை பற்றி கெட்டவிதமான தகவல்களையோ மற்றவர்களுக்கு பரப்பிவிடுகின்றனர். இதனால் கடன் செயலியில் கடன் பெற்றவர்கள் பதறிபோய் மர்மநபர்கள் கேட்கும் பணத்தை கொடுப்பதோடு, மனரீதியாகவும் பாதிப்படைகின்றனர்.

பாதிப்படைந்த பெண்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடன் செயலியால் பாதிப்படைந்த ஆண்கள் பலர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஓரிரு மாதங்களில் கடன் செயலியை பதிவிறக்கம் செய்து கடன் பெற்ற பெண்கள் சிலர் பாதிப்படைந்துள்ளனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் 6-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "பணத்தை இழந்ததோடு அவர்களை பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் மற்றவர்களிடம் நற்பெயர் கெட்டுவிடுகிறது.

இதனால் அவர்கள் பெரும் பாதிப்படைகின்றனர். கடன் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுத்தாலும், வெவ்வேறு பெயர்களில் புதிது, புதிதாக செயலியை உருவாக்கி மோசடியில் ஈடுபடுகின்றனர். இவர்களை கைது செய்வதில் பெரும் சிரமமாக உள்ளது. இவர்கள் பெரும்பாலும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து இயங்குகிறார்கள். இதனால் நடைமுறை சிக்கல்கள் பல உள்ளது. எனவே கடன் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இதேபோல முதலீடு செயலி என புதிதாக மற்றொரு செயலியும் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதனையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்'' என்றனர்.


Next Story