தர்மபுரி அருகே நூலஅள்ளியில்சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்


தர்மபுரி அருகே நூலஅள்ளியில்சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2023 12:30 AM IST (Updated: 14 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே நூலஅள்ளியில் தார்சாலை அமைக்காததை கண்டித்து பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி அருகே நூலஅள்ளியில் தார்சாலை அமைக்காததை கண்டித்து பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழுதடைந்த சாலை

தர்மபுரி ஒன்றியம் நூலஅள்ளி, உழவன்கொட்டாய் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் படிக்க தர்மபுரி மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதையொட்டி 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள் நூலஅள்ளி முதல் உழவன்கொட்டாய் வரை சென்று வருகின்றன. இங்கு 2 கிலோ மீட்டர் தூரம் தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் அமைக்கப்பட்ட தார்சாலை பழுதடைந்து சேரும் சகதியுமாய் உள்ளது.

இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலையில் இந்த சாலை பழுதடைந்து காணப்படுகிறது. தற்போது இந்த சாலை நெடுஞ்சாலை துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பழுதான தார்சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என நூலஅள்ளியைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நாற்று நடும் போராட்டம்

இந்த நிலையில் நேற்று நூலஅள்ளியில் இருந்து உழவன்கொட்டாய் செல்லும் சாலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தார்சாலை அமைக்காததை கண்டித்து நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைத்து தார்சாலை அமைக்க வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கோரிக்கை எடுத்து வருகிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல்வேறு முறை மனு கொடுத்தும் சாலை அமைக்கவில்லை. எனவே உடனடியாக சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு நேரில் சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்


Next Story