தீக்குளித்த பெண் சாவு
போடியில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
போடி இளங்கோவடிகள் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ரேவதி (வயது 40). இந்த தம்பதிக்கு வீரலட்சுமி, தனலட்சுமி என்ற 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று வீரலட்சுமி, தனலட்சுமி இடையே செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக சண்டை ஏற்பட்டது. அவர்களை ரேவதி கண்டித்தார். இதனால் தனலட்சுமி கோபித்துக் கொண்டு மாடிக்கு சென்று விட்டார்.
அப்போது ரேவதி மாடிப்படியில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து கொண்டு, நீங்கள் இருவரும் அடிக்கடி சண்டையிட்டால் மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்து கொள்வேன் என்று கூறி விளையாட்டாக தீயை பற்ற வைத்தார். இதில் எதிர்பாராதவிதமாக அவர் மீது தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள்கள் ரேவதியின் உடலில் எரிந்த தீயை அணைத்தனர்.
பின்னர் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரேவதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.