கும்பகோணம் மகளிர் போலீஸ் நிலையம்முன்பு இளம்பெண் தர்ணா
திருமணம் செய்ய மறுக்கும் காதலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தனது பெற்றோருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கும்பகோணம்;
திருமணம் செய்ய மறுக்கும் காதலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தனது பெற்றோருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தர்ணா போராட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா சின்னகரம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி(வயது 23). இவர், கும்பகோணத்தில் ஒரு நகைக் கடையில் வேலை பார்த்து வந்தார்.நேற்று இவர் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தின் முன்பு கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் பகுதியை சேர்ந்த என்ஜினீயரான ராம்பிரசாத் (29) என்பவர் ஆசை காட்டி ஏமாற்றியதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
1½ ஆண்டுகளாக காதல்
நான் கும்பகோணத்தில் ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வந்தேன். அதே கடையில் ராம்பிரசாத்தின் அண்ணனும் வேலை பார்த்து வந்தார். இதனால் ராம்பிரசாத் தனது அண்ணனை பார்க்க அடிக்கடி நகைக்கடைக்கு வந்து செல்வார்.அப்போது அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் 1½ ஆண்டுகளாக காதலித்து வந்தோம். திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்னுடன் நெருங்கி பழகினார். தற்போது அவருக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதால் கடந்த 2 மாதங்களாக அவர் என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.
திருமணம் செய்ய மறுப்பு
இதுகுறித்து நான் அவருடைய வீட்டிற்கு சென்று கேட்டபோது என்னை அவதூறாக பேசியதுடன் தாக்கினர். கொலை மிரட்டலும் விடுத்தனர்.இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அங்கு இருதரப்பையும் அழைத்து பேசினர்.ஆனால் அது ஒருதலைப்பட்சமாக இருந்ததால் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தோம். அங்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கும்பகோணம் பகுதியில் நடந்துள்ளதால் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
காதலன் மீது நடவடிக்கை
அதன்படி இங்கு புகார் கொடுத்தோம். ஆனால் போலீசார் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் என்னை காதலித்து திருமணம் செய்ய மறுக்கும் ராம்பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தர்ணா போராட்டத்தில் எனது பெற்றோருடன் ஈடுபட்டுள்ளேன் என்றார்.இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் தர்ணா போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.