விபத்தில் படுகாயம் அடைந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு: புதுக்கோட்டையில் சோகம்
விபத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையை அடுத்த மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரியா (வயது 45). இவர் கடந்த 2003-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். தற்போது, இவர் திருச்சியை அடுத்த திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் சிவக்குமார். இவர் டாஸ்மாக் பாரில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பிரியா கடந்த 7-ந்தேதி பணி முடிந்து, திருச்சியில் இருந்து மேட்டுப்பட்டிக்கு பஸ்சில் சென்றார். மேட்டுப்பட்டி வந்ததும் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது, அங்கு தயாராக நின்று இருந்த சிவக்குமார், பிரியாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அழைத்து சென்றார்.
அந்த சாலையில் உள்ள வேகத்தடையை கவனிக்காமல் சிவக்குமார் வேகமாக சென்றுள்ளார். இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த இன்ஸ்பெக்டர் பிரியா தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரியா நேற்று காலை மூளைச்சாவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் நெடுவாசலில் உள்ள வீட்டிற்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டது. அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் சக போலீசார், அதிகாரிகள், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அவரது உடலை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மற்றும் போலீசார் சுமந்து சுடுகாட்டிற்கு கொண்டு வந்தனர். பின்னர் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடலுக்கு இறுதி சடங்கு மரியாதை செய்யப்பட்டன. இதையடுத்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் இறந்த சம்பவம் போலீசாரிடையேயும், அவரது குடும்பத்தினரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்தது தொடர்பாக புதுக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.