தலையில் கல்லைப்போட்டு பெண் படுகொலை
திண்டுக்கல் அருகே தலையில் கல்லைப்போட்டு பெண் படுகொலை செய்யப்பட்டார்.
கட்டிட தொழிலாளி
திண்டுக்கல் அருகே உள்ள மாலப்பட்டி அன்னை காமாட்சி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி செல்லமணி (வயது 45). கட்டிட தொழிலாளி. இவர்களுக்கு தனபால் (25), சண்முகசுந்தரம் (21) என்ற 2 மகன்கள் உள்ளனர். தனபால் திருமணமாகி மனைவியுடன் கோவையில் வசித்து வருகிறார். சண்முகசுந்தரம் திண்டுக்கல்லில் பழனி சாலையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறார்.
முருகேசன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் செல்லமணி தனது மகன் சண்முகசுந்தரத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று சண்முகசுந்தரம் கல்லூரிக்கு சென்று மாலையில் வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு அவரது தாய் செல்லமணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு கூடினர்.
பெண் படுகொலை
பின்னர் திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் செல்லமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்லமணி தலையில் கல்லைப்போட்டு மர்ம நபர் ஒருவர் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.