கார் மீது லாரி மோதி பெண் பலி
திருமங்கலம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
லாரி மோதியது
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள மாதங்கோவில்பட்டியை சேர்ந்தவர் ஜான்சாமுவேல். சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்தினருடன் காரில் ஈரோடு சென்றார். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு மீண்டும் ஊருக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி அருகே கார்சென்று கொண்டிருந்தது.
அப்போது பின்னால் வேகமாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக லாரி முன்னால் சென்ற கார் மீது வேகமாக மோதியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பெண் பலி
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அமர்தம் என்ற பெண் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த ஜான்சாமுவேல், இறைநிலா, லில்லிபுஷ்பம், எர்ணாஸ், லியோன், டேவிட் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான அமர்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.