மின்னல் தாக்கி பெண் பலி


தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையில் மின்னல் தாக்கி பெண் பலியானார்.

தூத்துக்குடி

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் பெண் பலியானார். மேலும் 4 விவசாய தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

நெல்லையில் மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலை வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் 12 மணிக்கு திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை, டவுன் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்றனர்.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- சேரன்மாதேவி - 46, அம்பை- 35, மாஞ்சோலை-34, பாபநாசம்-26.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மதியத்துக்கு பிறகு சாரல் மழை பெய்தது. நேரம் செல்ல செல்ல கனமழையாக பெய்ய தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. இதனால் தற்போது விவசாய பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவில்பட்டியில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய மழை சுமார் ¼ மணி நேரம் பெய்தது. தூத்துக்குடியில் மாலை 6.45 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மழை பெய்தது.

பெண் பலி

எட்டயபுரம், விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், சூரங்குடி, குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 12.15 மணி முதல் சுமார் 2 மணி நேரம் இடி-மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மழைநீர் சூழ்ந்தது.

இந்த மழைக்கு பெண் ஒருவர் பலியானார். விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி மாலதி (வயது 47). இவர் விவசாய பணிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திடீரென மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

4 பேர் காயம்

இதேபோல் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம், தங்கமாரி, முருகலட்சுமி, ஈஸ்வரி ஆகிய 4 பேரும் விவசாய பணிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாலதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் நேற்று முன்தினம் மதியம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து சென்றனர்.

தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது.


Next Story