விருத்தாசலம் அருகே பரபரப்பு நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் காயம் போலீசார் விசாரணை
விருத்தாசலம் அருகே நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் காயமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்,
குண்டு பாய்ந்தது
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் காசிப்பிள்ளை. இவருடைய மனைவி சாந்தகுமாரி (வயது 21). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சாந்தகுமாரி, வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். வீட்டிற்குள் அவரது கணவரும், குழந்தைகளும் இருந்தனர். அப்போது அங்கு திடீரென பயங்கர வெடி சத்தம் ஒன்று கேட்டது.
இந்த சத்தம் கேட்டு காசிப்பிள்ளை வெளியே ஓடி வந்து பார்த்தார். அப்போது சாந்தகுமாரி, மயங்கிய நிலையில் சுருண்டு விழுந்து கிடந்தார். உடனே அவரை எழுப்பி பார்த்தபோது, அவருடைய இடுப்பு பகுதியில் நாட்டு துப்பாக்கியின் குண்டு பாய்ந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
போலீசார் விசாரணை
பின்னர் காசிப்பிள்ளை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சாந்தகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இச்சம்பவம் பற்றி அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள மான், மயில், முயல், காட்டு பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு, அப்பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் தினமும் இரவில் அங்கு வந்து செல்வது தெரியவந்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு வேட்டையாட வந்த மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் விலங்குகளை சுட்ட போது, சாந்தகுமாரி மீது குண்டு பாய்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.