ஹீட்டரால் தண்ணீரை சூடாக்கிய போது மின்சாரம் தாக்கி பெண் சாவு


ஹீட்டரால் தண்ணீரை சூடாக்கிய போது மின்சாரம் தாக்கி பெண் சாவு
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே ஹீட்டரால் தண்ணீரை சூடாக்கிய போது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

நாகர்கோவில் அருகே ஹீட்டரால் தண்ணீரை சூடாக்கிய போது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

மின்சாரம் பாய்ந்தது

நாகர்கோவில் அருகே வில்லுக்குறி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஏசு ராஜேந்திரன் (வயது 50), கட்டிட காண்டிராக்டர். இவருடைய மனைவி பிரேமா (48). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் 2 பேருக்கு திருமணமாகி விட்டது.

இந்தநிலையில் பிரேமா நேற்று முன்தினம் குளிப்பதற்காக ஹீட்டரில் தண்ணீரை சூடாக்க முயன்றார். இதற்காக பக்கெட்டில் தண்ணீரை எடுத்து அதில் ஹீட்டரை போட்டு சூடாக்கி கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கடந்து தண்ணீர் சூடாகி விட்டதா? என பார்ப்பதற்காக தண்ணீரை தொட்டு பார்த்தார். அப்போது எதிர்பாராத விதமாக பிரேமா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சத்தம் போட்டு அலறிய நிலையில் சுருண்டு விழுந்தார். உடனே குடும்பத்தினர் ஓடி வந்து பிரேமாவை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பெண் சாவு

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிரேமா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் ெகாடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹீட்டரில் தண்ணீரை சூடாக்கிய போது மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story