4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை


4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 3 Jan 2023 1:15 AM IST (Updated: 3 Jan 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே 4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

ஓமலூர்:-

ஓமலூர் அருகே 4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு பள்ளி ஆசிரியர்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தொளசம்பட்டி ஓலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவருடைய மகன் கணபதி (வயது 30). இவர் அமரகுந்தி கரட்டுபட்டி அரசு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், மல்லிக்குட்டை பரியம்பட்டி பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகள் ஸ்ரீதேவிக்கும் (25) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சித்தேஸ்வரன் (4) என்ற மகன் இருந்தான்.

ஸ்ரீதேவி அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். மேலும் அவருக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஸ்ரீதேவி தனது தந்தை வீட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று உடல்நலம் சரியானவுடன் அவரது கணவர் அவரை, தனது வீட்டுக்கு அழைத்து செல்வது வழக்கமாகும்.

வைகுண்ட ஏகாதசி

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணபதி, அவரது மாமனார் வீட்டுக்கு சென்று தனது மனைவி மற்றும் மகனை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். நேற்று காலை அவர் தனது மாமனாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு வைகுண்ட ஏகாதசியையொட்டி நங்கவள்ளியில் உள்ள கோவிலுக்கு சென்று வருகிறேன், நீங்கள் தனது வீட்டிற்கு வந்து ஸ்ரீதேவி மற்றும் மகனை பார்த்து கொள்ளும்படி கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து மாரியப்பன் ஓலைப்பட்டியில் உள்ள மருமகன் வீட்டுக்கு சென்றார். அங்கு மகள் மற்றும் பேரக்குழந்தையை காணாமல் அக்கம் பக்கத்தில் அவர் தேடி உள்ளார். பின்னர் பக்கத்து வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது தோட்டத்து கிணற்று பக்கம் குழந்தையுடன் ஸ்ரீதேவி சென்றது தெரியவந்தது.

2 பேரின் உடல்கள் மீட்பு

உடனே அங்கு சென்று பார்த்தபோது ஸ்ரீதேவி கிணற்றில் பிணமாக மிதந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஸ்ரீதேவியின் உடலை அவர் கிணற்றில் இருந்து மீட்டார்.

ஆனால் பேரனை காணவில்லை. எனவே பேரக்குழந்தை கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்பதால் அவர் ஓமலூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஓமலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று கிணற்றில் மூழ்கிய சிறுவன் சித்தேஸ்வரனின் உடலை மீ்ட்டனர்.

கிணற்றில் குதித்து தற்கொலை

இதையடுத்து தொளசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,ஸ்ரீதேவி மற்றும் சித்தேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஸ்ரீதேவி தனது 4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவர் எதற்காக தற்கொலை முடிவை எடுத்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு பள்ளி ஆசிரியரின் மனைவி, 4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஓமலூர் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story