குடும்ப தகராறில் பெண் அடித்துக்கொலை
கொள்ளிடம் அருகே
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே குடும்ப தகராறில் பெண்ணை அடித்துக்கொன்ற கணவரின் தம்பியை போலீசார் கைது செய்தனர்.
குடும்ப பிரச்சினை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புதுப்பட்டினம் கிராமம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 36). தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி தீபலட்சுமி(34). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1½ வயதில் ஆர்த்திகா என்ற பெண் குழந்தை உள்ளது.
கண்ணனின் தம்பி கோபிநாதன்(34). இவருக்கு திருமணமாகி விட்டது. கண்ணனும், கோபிநாதனும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அண்ணன், தம்பிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.
வயிற்றில் உதைத்தார்
சம்பவத்தன்று குடும்ப பிரச்சினையின் காரணமாக கண்ணனுக்கும், கோபிநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது அவர்களை தடுக்க வந்த கண்ணனின் மனைவி தீபலட்சுமியை கோபிநாதன் தாக்கி அவரது வயிற்றில் உதைத்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து அவரை மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனின் தம்பி கோபிநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.