கோவில்களில் நகை திருடிய பெண் கைது


கோவில்களில் நகை திருடிய பெண் கைது
x
தினத்தந்தி 23 Aug 2023 12:30 AM IST (Updated: 23 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் பகுதியில் கோவில்களில் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் பகுதியில் கோவில்களில் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

நகை திருட்டு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மாவடிகால் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் கடந்த 17-ந் தேதி அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 5 கிராம் தங்க சங்கிலியை பெண் ஒருவர் திருடிச் சென்றார். அதுபோல் முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த நகையும் திருடப்பட்டது.

இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் தனித்தனியாக கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தனிப்படை அமைப்பு

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் புளியங்குடி துணை சூப்பிரண்டு அசோக் மேற்பார்வையில், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்பசாமி, கிருஷ்ணன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் கோவில் மற்றும் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு பெண் கோவில் பகுதிகளில் செல்வதும், வருவதுமாக இருப்பது தெரியவந்தது. அதில் காணப்பட்ட அடையாளங்கள் வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர்.

பெண் சிக்கினார்

அதில் அந்த பெண் சங்கரன்கோவில் அருகே உள்ள ராமசாமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருள் செல்வம் மனைவி சண்முக சுந்தரி (வயது 35) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் காளியம்மன் கோவில் மட்டும் அல்லாமல் மாவடிக்காலில் உள்ள கங்கை அம்மன், முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவில்களில் அம்மன் கழுத்தில் இருந்த தலா 5 கிராம் தங்க சங்கிலி திருடியதும் தெரியவந்தது. மேலும் புளியங்குடி, அச்சன்புதூர், கோவில்பட்டி பகுதியில் உள்ள 10 மேற்பட்ட கோவில்களில் நகைகள் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது

தொடர்ந்து போலீசார், சண்முக சுந்தரியை கைது செய்து, அவரிடம் இருந்து 11 கிராம் நகைகளை மீட்டனர்.




Next Story