என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த பெண் கைது


என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த பெண் கைது
x

என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

வடலூர் அருகே உள்ள வானதிராயபுரத்தை சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி ஜெயந்தி (வயது 40). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சித்ரா என்பவர் மூலம் ஆபத்தாரணபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி புவனேஸ்வரியுடன் (36) பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர், தான் பலருக்கு என்.எல்.சி. மற்றும் கடலூர் அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும், தனக்கு பணம் கொடுத்தால் உனக்கு தெரிந்தவர்களுக்கும் வேலை வாங்கி தருகிறேன் என்றும் ஜெயந்தியிடம் கூறினார். இதை நம்பிய ஜெயந்தி தனது கணவர் முருகவேல், தம்பி காத்தவராயன், தங்கை ஜெயலட்சுமி மற்றும் உறவினர்கள் 4 பேருக்கு வேலை வாங்கி தரும்படி கூறி ரூ.7 லட்சத்து 95 ஆயிரத்தை புவனேஸ்வரியிடம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட புவனேஸ்வரி என்.எல்.சி. நிறுவனம் மற்றும் கடலூர் அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தரவில்லை.

போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

இது குறித்து ஜெயந்தி, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதன் பேரில் இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் புவனேஸ்வரி, வேலை வாங்கி தருவதாக கூறி ஜெயந்தியிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரியை கைது செய்தனர்.


Next Story