குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் சாவு


குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் சாவு
x

கரூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.

கரூர்

இளம்பெண் சாவு

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மருதம்பட்டி காலனியை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது 27). கொத்தனார். இவருக்கு திருமணமாகி ஜோதி (27) என்ற மனைவியும், சிவானி (5), ரிதன்யா ஸ்ரீ (2) என 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் ஜோதிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை ஜோதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக மயக்க ஊசி செலுத்தும் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்தில் மயக்கமடைந்த ஜோதி முற்றிலும் சுயநினைவை இழந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ஜோதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

உடலை வாங்க மாட்டோம்

இதனையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திரண்ட ஜோதியின் உறவினர்கள் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறு இருப்பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கோட்டாட்சியர் விசாரணை

மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளில் ஜோதி இறந்துள்ளதால் கரூர் கோட்டாட்சியரின் விசாரணைக்கு பின் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

மேலும் இறந்த ஜோதியின் கணவர் முகேஷ்குமார் தனது மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story