மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுடன் கலெக்டர் பஸ்சில் பயணம்


மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுடன் கலெக்டர் பஸ்சில் பயணம்
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுடன் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பஸ்சில் பயணம் மேற்கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுடன் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பஸ்சில் பயணம் மேற்கொண்டார்.

ஆய்வு

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. இங்கு மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு சுயதொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறை, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பயிற்சிகள் குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வரும் பள்ளி வாகனத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அலுவலர்கள் குழந்தைகளுடன் அமர்ந்து சிறிது தூரம் பயணித்தனர்.

சாதிக்க வேண்டும்

பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:-

தூத்துக்குடி வித்யபிரகாசம் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்புப் பள்ளியில் படிக்கும் 15 குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறு தொழில்கள் செய்வதற்கான பயிற்சி அளித்து அவர்கள் தொழில் செய்து சுயமாக சம்பாதிக்க வழிவகை செய்யப்படும். குறிப்பாக பாக்கு மட்டை மூலம் தட்டுகள் தயாரிக்கும் பயிற்சி அளித்து வங்கிக்கடன் மூலம் தொழில் மையத்தை ஏற்படுத்தி வருமானம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பள்ளியில் ஆட்டிசம் குழந்தைகளுக்கு தனியாக கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். மேலும் வாகன ஓட்டுனர், உதவியாளர், தூய்மைக்காவலர் என 3 பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இந்த பள்ளி வாகனம் மூலம் குழந்தைகளை வீட்டில் இருந்து அழைத்து வருவதற்கு மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். மாற்றுத்திறனாளிகள் நிறைய சாதிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அதற்காகத்தான் தமிழக முதல்-அமைச்சர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் சாதிப்பதற்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story