இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளிக்கு 'விஸ்டம்' விருது
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளிக்கு 'விஸ்டம்' விருது வழங்கப்பட்டது.
குற்றாலம்,
தமிழகத்தின் தென்மண்டலத்தில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களை கண்டறிந்தும், அங்கு பயிலும் மாணவர்களின் கல்வி திறன், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான கல்விப்பணி மற்றும் பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகளை அறிந்து அவர்களை பாராட்டும் வகையில் விகடன் வி கனெக்ட் குழுவானது ஆண்டுதோறும் 'விஸ்டம்' விருது வழங்கி வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் - ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள பாரத் மாண்டிசோரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி கடந்த 33 வருடங்களாக வெற்றிகரமான மாணவர்களை உருவாக்கி வருகிறது. கடந்த 1990-ம் ஆண்டு ஸ்ரீ அப்பாசாமி கரையாளர் கல்வி அறக்கட்டளையின் கீழ் தலைவர் மோகனகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி இயக்குனர் ராதாபிரியா பள்ளியை மாநிலத்தில் தலைசிறந்த பள்ளியாக செயல்பட உழைத்து வருகிறார். பாரத் மாண்டிசோரி பள்ளியின் செயல்பாடுகளை அளவீடு செய்து விகடன் குழுமம் பெஸ்ட் 2022 விருதுக்கு தேர்வு செய்தது.
அந்த வகையில் இந்த ஆண்டு மதுரையில் நடைபெற்ற தென்மண்டலங்களுக்கான சிறந்த மெட்ரிக்குலேசன் பள்ளிக்கான 'விஸ்டம்' 2022-ம் ஆண்டுக்கான விருதினை இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி பெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார். இந்த விருதினை பள்ளியின் தலைவர் மோகனகிருஷ்ணன் மற்றும் இயக்குனர் ராதாபிரியா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விருது பெற்று திரும்பிய பள்ளித் தலைவர் மற்றும் இயக்குனரை கல்விக் குழுமங்களின் செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷா ரமேஷ், பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் வரவேற்று பாராட்டு தெரிவித்தனர்.