கம்பைநல்லூரில்டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு பா.ம.க.வினர் போலீசில் புகார் மனு
மொரப்பூர்:
கம்பைநல்லூர் பஸ் நிலையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை கம்பைநல்லூரில் இருந்து ஒடசல்பட்டி செல்லும் சாலை ஜெ.ஜெ.நகர் பகுதிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தர்மபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் அரசாங்கம், கம்பைநல்லூர் பேரூராட்சி துணைத்தலைவர் மதியழகன் ஆகியோர் தலைமையில் பா.ம.க.வினர் கம்பைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் ஒரு புகார் மனுவை கொடுத்தனர்.
அதில் சின்ன முருக்கம்பட்டி, பெரிய முருக்கம்பட்டி, குண்டல்பட்டி, ஆல்ரபட்டி, பாகல்பட்டி மற்றும் இதர பகுதியை சேர்ந்த வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ஜெ.ஜெ.நகர் பகுதியை கடந்து செல்ல வேண்டும். மேலும் அங்கு அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே ஜெ.ஜெ. நகரில் டாஸ்மாக் கடை அமைக்கும் நடவடிக்கையை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அப்போது பா.ம.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் முருகன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் பசவராஜ், கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய தலைவர் மாயக்கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.