எலச்சிபாளையம் அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு கலெக்டரிடம், பொதுமக்கள் மனு


எலச்சிபாளையம் அருகே  புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு  கலெக்டரிடம், பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

எலச்சிபாளையம் அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

டாஸ்மாக் கடை

எலச்சிபாளையம் அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

எலச்சிபாளையம் ஒன்றியம் உஞ்சனை ஊராட்சிக்குட்பட்ட தொட்டியங்காடு தண்ணீர்பந்தல்பாளையத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. புதிய கடை அமைக்கும் இடத்தில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு குடியிருப்புகள், விவசாய நிலங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி தொடக்கப்பள்ளி, கோவில், புறவழிச்சாலை பஸ் நிறுத்தும் உள்ளது.

இப்பகுதியில் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள், நோயாளிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் நோயாளிகள், பெண்கள், மாணவ, மாணவிகளுக்கு மதுப்பிரியர்களால் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.

அனுமதி அளிக்க கூடாது

மேலும் டாஸ்மாக் கடை தொடங்கினால் குற்றச்செயல்கள் அதிகம் அரங்கேற வாய்ப்பு உள்ளது. விவசாய நிலங்கள் திறந்தவெளி பாராக மாறி, விளை நிலங்கள் பாழ்படும் அபாயமும் உள்ளது. எனவே திம்மராவுத்தம்பட்டி, தண்ணீர்பந்தல்பாளையம் பகுதி பொதுமக்கள், மாணவ, மாணவிகள், பெண்கள், விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, புதிய டாஸ்மாக் கடை தொடங்க அனுமதி அளிக்கக் கூடாது.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

இலவச வீட்டுமனை பட்டா

இதேபோல் நியூ காந்தி மக்கள் இயக்கம் சார்பில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. நிலமும் இல்லை. வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Next Story