தி.மு.க. கூட்டணியில் 4 தொகுதிகளை கேட்டுள்ளோம் - திருமாவளவன்
3 தனித்தொகுதி, ஒரு பொதுத் தொகுதி என 4 தொகுதிகள் கேட்டுள்ளதாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மக்களவை தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் பரபரப்பான சூழ்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் சூடு பிடித்துள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவது என்று இறுதி செய்து வருகிறது.
இதுவரை காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது.
இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. - வி.சி.க. இடையிலான தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. மற்றும் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், " 2019ம் ஆண்டில் இருந்து தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக இருந்து வருகிறது. 3 தனித்தொகுதி, ஒரு பொதுத் தொகுதி என 4 தொகுதிகள் கேட்டுள்ளோம். தி.மு.க. கூட்டணி, இந்தியா கூட்டணி என்ற அளவிற்கு விரிவடைந்துள்ளது. தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெறும்.
போட்டியிட விரும்பிய தொகுதி பட்டியலை அளித்துள்ளோம். சிதம்பரம், விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 தொகுதிகளை கேட்டுள்ளோம். கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட தொகுதி விருப்ப பட்டியலையும் வழங்கி உள்ளோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படும்.
கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல் கண்டனத்திற்குரியது. தமிழகத்தின் கவர்னராக அவர் செயல்படவில்லை" என்று அவர் கூறினார்.
முன்னதாக தி.மு.க. கூட்டணியில் 2019 மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரம் தொகுதியில் வி.சி.க. தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் வி.சி.க. பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.