வ.உ.சி.பூங்கா ரோடு திறக்கப்படுமா? பொதுமக்கள் வேண்டுகோள்


வ.உ.சி.பூங்கா ரோடு திறக்கப்படுமா? பொதுமக்கள் வேண்டுகோள்
x

சுவஸ்திக் கார்னர் பகுதியில் வ.உ.சி.பூங்கா ரோட்டை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு

சுவஸ்திக் கார்னர் பகுதியில் வ.உ.சி.பூங்கா ரோட்டை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வளர்ச்சி பணிகள்

ஈரோடு மாநகரில் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சித்திட்ட பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மழை நீர் வடிகால் அமைப்பு, நடைபாதை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

இப்படி பணிகள் நடைபெறும்போது இணைப்பு சாலை பகுதிகளில் பள்ளம் தோண்டி, கான்கிரீட் போடுவது அத்தியாவசியமாகிறது. ஆனால், இப்படி பணிகள் செய்யும்போது அந்த சாலை துண்டிக்கப்படும். மாற்று சாலைகள் இருந்தாலும், அது போக்குவரத்துக்கு போதியதாக இருக்காது.

சுவஸ்திக் கார்னர்

ஆனால் குறிப்பிட்ட பகுதியில் பணிகள் மந்தமாக நடப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஆபத்து காலங்களில் ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியாத அவலம் உள்ளது. இதுபோல் ஈரோடு பஸ் நிலையம் அருகே சுவஸ்திக் கார்னரில் இருந்து வ.உ.சி.பூங்கா செல்லும் வி.சி.டி.வி. சாலை துண்டிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.

இங்கு கான்கிரீட் போடும் பணிகள் நிறைவடைந்து விட்டன. எனினும் சாலை திறக்கப்படாமல் இருக்கிறது. இங்கு உள்ள வீடுகளில் குடியிருப்பவர்கள், கடைகள் நடத்துபவர்கள், சந்தைக்கு செல்லும் வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

கோரிக்கை

இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் கூறும்போது, துண்டிக்கப்பட்ட பகுதியில் கான்கிரீட் அமைத்து பல வாரங்கள் ஆகிவிட்டன. அதை பலப்படுத்தும் பணிகள் கூட இப்போது நடப்பதில்லை. வெறுமனே பாதையை அடைத்து வைத்திருக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் அடையும் பாதிப்பை பற்றி அதிகாரிகள் சிறிதும் சிந்திக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.

வ.உ.சி.பூங்கா, விளையாட்டு அரங்கம், நேதாஜி மார்க்கெட், அரசு அருங்காட்சியகம் என முக்கிய வளாகங்கள் அமைந்திருக்கும் பகுதியை அடைத்து வைக்காமல் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


Related Tags :
Next Story