கோரையாறு பாலம் சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?


கோரையாறு பாலம் சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 12:33 PM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே கோரையாறு பாலம் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கோரையாறு பாலம்

கூத்தாநல்லூர் அருகே உள்ளது கோரையாறு பாலம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட இந்த பாலத்தை மையமாக கொண்டு திருவாரூர் சாலை, மன்னார்குடி சாலை, வடகோவனூர் சாலை என மூன்று பிரிவு சாலைகள் உள்ளன.

இந்த சாலை திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருவாரூர், கும்பகோணம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் போன்ற ஊர்களை இணைக்கும் முக்கிய வழித்தடம் ஆகும். இதனால் இந்த சாலையில் தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி-கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள், கனரக வாகனங்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் சென்று வருகின்றன.

அடிக்கடி விபத்து

இந்த நிலையில், கோரையாறு பாலத்தின் இரண்டு முகப்பிலும், வடகோவனூர் செல்லும் சாலையின் முகப்பிலும் எதிர் எதிரே வரும் வாகனங்கள் எளிதில் தெரிவதில்லை. மேலும் மூன்று பிரிவு சாலையிலும் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. கோரையாறு பாலம் அமைந்துள்ள இடத்தில் அடுத்தடுத்து ஆபத்தான வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் வாகனங்களை திருப்புவதில் கவனம் செலுத்தும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்களை உடனடியாக கவனிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.

அதனால், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படும் இடமாக கோரையாறு பாலம் அமைந்துள்ள சாலை உள்ளது. எனவே மூன்று பிரிவு சாலையின் முகப்பிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story