தளவாப்பாளையம் கடைவீதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?


தளவாப்பாளையம் கடைவீதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
x

தளவாப்பாளையம் கடைவீதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா? என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

கடைவீதி

கரூர் மாவட்டம், புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட தளவாப்பாளையத்தில் கடைவீதி பகுதி உள்ளது. மேலும் இதனை சுற்றியுள்ள வட்டார பகுதிகளான ஓரத்தை, அம்மாப்பட்டி, ஆவாரங்காட்டுபுதூர், சேங்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தினமும் கடைவீதிகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

நீண்டநாள் கோரிக்கை

மேலும், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தளவாப்பாளையம் கடைவீதிக்கு வந்து அங்கிருந்து தான் கரூர், வேலூர், வாங்கல் ஆகிய பல்வேறு ஊர்களுக்கு பஸ்சில் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் கடைவீதியில் எந்த இடத்திலும் பயணிகளுக்கான நிழற்குடை பல ஆண்டுகளாக அமைக்கப்படவில்லை. அதற்கான நிதியும் இன்னும் ஒதுக்கவில்லை. இதனால் கடைவீதிக்கு பஸ் ஏற வரும் பொதுமக்கள் மழை, வெயில், பனி போன்ற நேரங்களில் மரத்தடியில் நின்றபடியே வெகுநேரம் காத்திருந்து பஸ்களில் சென்று வருகின்றனர். இதனால் கடைவீதியில் நிழற்குடை அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி ெபாதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை ேசர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-

உணவு கொண்டு செல்ல முடியவில்லை

தளவாப்பாளையம் கடைவீதியில் உணவகம் நடத்தி வரும் ராஜேந்திரன்:-

நான் பல வருடங்களாக உணவகம் நடத்தி வருகிறேன். இந்த சுற்றுப்பகுதியில்

நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்டவைகளை எனது உணவகத்தில் இருந்து உணவு தயார் செய்து, அதனை உரியவர்களிடம் ஒப்படைக்க பஸ்களை தான் நம்பி இருந்தேன். கடைவீதியில் பஸ் நிழற்குடைகள் எந்த இடத்திலும் இல்லாததால் எப்போது பஸ் வரும் என்ற தகவல் கிடைப்பதில்லை. அதனால் சரியான நேரத்திற்கு உணவை கொண்டு செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. தற்ேபாது வேன் மூலம் கொண்டு செல்கிறேன். எனவே கடைவீதியில் நிழற்குடை இ்ல்லாதது வேதனையாக உள்ளது.

பரபரப்பாக காணப்படும் கடைவீதி

தளவாப்பாளையத்தில் மளிகைக்கடை நடத்தி வரும் கரிகாலன்:-

தளவாப்பாளையத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் பஸ்சை விட்டு இறங்கி கடைவீதிக்கு வந்து, பொருட்களை தினமும் வாங்கி செல்கின்றனர். கடைவீதியில் பஸ் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் தாங்கள் வாங்கி வைத்திருக்கும் பொருட்களை கையில் வைத்து கொண்டு அந்த வழியாக வரும் பஸ்களில் ஏதாவது ஒன்றை நிறுத்தி ஓடி சென்று ஏறுகின்றனர். இதனால் சில நேரங்களில் தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், ஓரத்தை ஆகிய சிறிய கிராமங்களில் கூட நிழற்குடை வசதி உள்ளது. ஆனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதியில் நிழற்குடை இல்லாதது கவலை அளிக்கிறது.

தகுந்த பாதுகாப்புடன்...

தளவாப்பாளையத்தை சேர்ந்த சமூக ஆா்வலர் மலையப்பன்:-

தளவாப்பாளையம் கடைவீதியில் நிழற்குடை கண்டிப்பாக அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால் அதில் சிமெண்டு நாற்காலிகள் அமைக்கக் கூடாது. ஏனென்றால் அப்படி அமைத்தால் மதுபிரியர்கள் அங்கு அமர்ந்து மது அருந்தும் கூடாரமாக அமைந்து விடும். சிலர் தங்களது சொந்த தேவைக்கு பயன்படுத்த நேரிடும். அதனால் இரும்பிலான நாற்காலிகள் உள்ளே பயணிகள் அமர்வதற்கு அமைத்தால் போதுமானது. எனவே தகுந்த பாதுகாப்புடன் நிழற்குடை விரைவில் அமைக்கவேண்டும்.

2 நிழற்குடைகள் வேண்டும்

தளவாப்பாளையத்தை சேர்ந்த பொறியாளர் வேலுச்சாமி:-

தளவாப்பாளையம் கடைவீதியில் நீளவடிவில் நிழற்குடை அமைக்க வேண்டும். ஏனென்றால் கடைவீதிக்கு பொருட்கள் வாங்க தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வார்கள். பின்னர் பொருட்களை மொத்தமாக வாங்கி கொண்டு பஸ்சுக்காக நிழற்குடையில் காத்திருக்கும்போது இடவசதி இல்லாம் போய் விடும். இதனால் பெரிய அளவிலான நிழற்குடை அமைக்க வேண்டும். மேலும் சாலையில் எதிர்புறம் மற்றும் மறுபுற என 2 இடங்களில் நிழற்குடை அமைத்தால் வசதியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story