வண்டலூர் உயிரியல் பூங்கா ஒப்பந்த ஊழியர்களை தனியார் வசம் ஒப்படைப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்
வண்டலூர் உயிரியல் பூங்கா ஒப்பந்த ஊழியர்களை தனியார் வசம் ஒப்படைப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் பணியாற்றி வரும் 219 ஒப்பந்த தொழிலாளர்கள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே, அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பது அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே ஒப்பந்த தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்கும் புதிய கலாசாரம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத உழைப்பு சுரண்டல்.
இந்த முறையில் தொழிலாளர்களின் உரிமைகளும், ஊதியமும் பறிக்கப்படுகின்றன. எனவே வண்டலூர் உயிரியல் பூங்கா தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை அரசு ரத்துசெய்ய வேண்டும்.
வண்டலூர் உயிரியல் பூங்கா, சென்னை குடிநீர் வாரியம், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையிலும், அவுட்சோர்சிங் அடிப்படையிலும் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களையும், அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அவர்களில் தகுதியான அனைவருக்கும் பணிநிலைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.