கருத்தடை திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுமா?


கருத்தடை திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுமா?
x

கருத்தடை திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுமா?

நாகப்பட்டினம்

நாகையில் அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நாய்களுக்கான கருத்தடை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெரு நாய்கள் தொல்லை

வீடுகளில் செல்லப்பிராணியாக நாய்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. மிகுந்த விசுவாசம் கொண்ட பிராணியான நாய், வீட்டுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய காவலாளியாகவும் இருந்து வருகிறது. அவ்வாறு வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் முறையாக பராமரிக்கப்படுவதாலும், தடுப்பூசிகள் போடப்படுவதாலும் அவைகளால் பெரும்பாலும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

கருத்தடை திட்டம்

ஆனால் தெருக்களிலும், சாலைகளிலும் சுற்றித்திரியும் நாய்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் பல்வேறு சிரமங்களுக்கும், பாதிப்புகளுக்கும் ஆளாகி வருகின்றனர். நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முன்பு கருத்தடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அதாவது தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை, நகராட்சி பணியாளர்கள் பிடித்துச்சென்று அந்த நாய்களுக்கு கருத்தடை செய்து 'ரேபிஸ்' ஊசியையும் செலுத்தி சிறிது காலம் பராமரித்து பின்னர் பிடித்த இடத்திலேயே அவைகளை பத்திரமாக விட்டு விடுவார்கள். பிடிக்கப்பட்ட பெண் நாய்களின் கருப்பையை அகற்றி விடுவார்கள். இதனால் நாய்களின் இனப்பெருக்கம் குறைந்தது.

வீதிகளில் சுற்றி திரிகிறது

இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்படாததால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. நாகை நகராட்சிக்குட்பட்ட வெளிப்பாளையம், காடம்பாடி, நாணயக்கார தெரு, காளியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் எல்லாம் குறைந்தபட்சம் 5 நாய்கள் முதல் அதிகபட்சமாக 10 நாய்கள் வரை சுற்றி திரிவதை பார்க்கலாம்.

இந்த நாய்கள் வீதிகள், சாலையின் மையப்பகுதியில் படுத்து கொள்வதால் இருசக்கர வாகனம், கார்களில் செல்வோர் விபத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. வீதிகள், சாலைகளில் நடந்து செல்வோரை விரட்டுவது, சில நேரங்களில் கடிப்பது, குழந்தைகளை துரத்துவது என தொடர்ந்து பொதுமக்களுக்கு நாய்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. கடைக்கு செல்லும் சிறுவர்கள் ஏதேனும் தின்பண்டங்களை கையில் வைத்திருந்தால் அவர்களை துரத்தி செல்கிறது.

விபத்துக்குள்ளாகின்றனர்

குறிப்பாக இரவு பணி முடித்து வரும் ஆண்கள், பெண்களுக்கு, தெரு நாய்களால் சில நாட்களாக தொந்தரவு ஏற்பட்டு வருகிறது. பணி முடித்து வருவோரை தெரு நாய்கள் கூட்டமாக துரத்துகின்றன. வாகன ஓட்டிகளை, நாய்கள் துரத்தி செல்வதால், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி, வாகனங்களில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

அதுவும் இரவு நேரங்களில் நடந்து செல்வோரை மட்டுமின்றி வாகனங்களில் செல்வோரையும் துரத்தி வருவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சில பகுதிகளில் உடலில் காயங்கள் மற்றும் புண்களுடன் நோய் தாக்கிய தெருநாய்கள் சுற்றித்திரிவதால், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நாய்கள் வீட்டுக்குள் புகுந்து விடும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி

எனவே நாய்களுக்கான கருத்தடை திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, பெருகி வரும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். தற்போது கால்நடைத்துறை சார்பில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி தெரு நாய்களுக்கு போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story