புள்ளம்பாடி-திருமழபாடி சாலையில் ெரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?
புள்ளம்பாடி-திருமழபாடி சாலையில் ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புள்ளம்பாடி-திருமழபாடி சாலையில் ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெயில்வே கேட்
கல்லக்குடி அருகே புள்ளம்பாடி-திருமழபாடி சாலையில் ெரயில்வே கேட் சாலை உள்ளது. திருச்சியில் இருந்து புள்ளம்பாடி வழியாக திருமானூர், தஞ்சாவூர், அரியலூர் போன்ற பகுதிகளுக்கு இந்த ரெயில்வே கேட் சாலை வழியாக தான் செல்ல வேண்டும்.
அதுமட்டுமின்றி பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரசித்தி பெற்ற பூண்டி மாதாகோவில், அன்பில் மாரியம்மன் கோவிலுக்கு இந்த ரெயில்வே கேட் சாலை வழியாகதான் சென்று வருகிறார்கள். புள்ளம்பாடியில் உள்ள ஒன்றிய அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், அரசு தொழிற்பயிற்சி மையம், குமுளூரில் வேளாண்மை மற்றும் ஆசிரியர் பயிற்சி, கலை அறிவியல் கல்லூரிகளுக்கு செல்லவும் இந்த சாலையை தான் இப்பகுதி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
ரெயில்கள்
மேலும் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களும் இச்சாலை வழியாக தான் சென்று வருகின்றன.
அதேநேரத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, திருச்சி -சென்னை மார்க்க ரெயில்கள் இந்த ரெயில்வே கேட்டை கடந்து செல்லும். ஆனால் இங்கு மேம்பாலம் இல்லாததால் ரெயில் வரும் நேரங்களில் ரெயில்வே கேட் மூடப்படும். இதனால் வாகனங்கள் அந்த சாலையில் நீண்டநேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதிக வாகனங்கள் அந்த சாலையில் வந்து செல்வதால் ரெயில்வே கேட் மூடப்படு்ம் சமயங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ரெயில்வே மேம்பாலம்
அந்த சமயங்களில் சாலையை கடக்க பல மணி நேரம் ஆகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டியவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் உரிய நேரத்தில் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் பல பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனை செல்ல வேண்டிய மருத்துவர்கள், ஊழியர்கள், பல்வேறு தொழிற்சாலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, அப்பகுதியில் ெரயில்வே மேம்பாலம் அமைக்க முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டுமான பொருட்கள்
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
லாரி டிரைவர் திண்ணகுளம் கவுதம்:-
திருவாரூர் பகுதிக்கு கட்டுமான பொருட்களான கருங்கல் அரளை, ஜல்லிகற்கள், மணல் உள்ளிட்டவைகளை இந்த ரெயில்வே கேட் சாலை வழியாக கொண்டு செல்கிறோம். ரெயில்வே கேட் மூடப்படும் சமயங்களில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஒரு நாளைக்கு 2 முறை லோடு ஏற்றி செல்வதற்கு பதிலாக ஒருமுறைதான் லோடு ஏற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இங்கு ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.
பள்ளி வாகன டிரைவர் குலமாணிக்கம் சண்முகம்:-
இந்த பகுதியில் அடிக்கடி ெரயில்வே கேட் மூடியிருப்பதால் குறித்த நேரத்தில் பள்ளி மாணவ-மாணவிகளை பள்ளியில் சேர்க்க முடியவில்லை.
தனியார் பஸ் டிரைவர் டேனியல்:-
காலை, மாலை நேரங்களில் இந்த வழியாக பஸ்களை ஓட்டி செல்வோம். அந்த சமயங்களில் பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள் அதிக அளவில் பஸ்களில் ஏறுவார்கள். ரெயில்வே கேட் மூடப்படுவதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களை சென்று சேர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.
சமூக சேவகர் ஆலம்பாடி முருகன்:-
திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு இடையே இந்த ரெயில்வே கேட் இருப்பதால் கல்லூரி மற்றும் பள்ளி வேன் டிரைவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு ரெயில்வே மேம்பாலம் அமைப்பதுதான்.
ஆட்டோ டிரைவர் சதீஷ்குமார்:-
புள்ளம்பாடி அருகில் உள்ள கிராமங்கள், அலுவலகங்கள், திருமண மண்டபங்களுக்கு வாடிக்கையாளர்களை அழைத்து செல்லும்போது இந்த ெரயில்வே கேட் தடையால் குறித்த நேரத்திற்கு செல்லமுடியாத நிலை உள்ளது.
70 முறை மூடப்படுகிறது
டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் தண்டபாணி:- புள்ளம்பாடி-திருமழபாடி சாலையில் அமைந்துள்ள ெரயில்வே ரோட்டில் பகல் நேரங்களில் 30 முறையும் இரவு நேரங்களில் 40 முறையும் ெரயில்கள் கடந்து செல்கின்றன. இதனால் ஒரு நாளைக்கு 70 முறை ெரயில்வே கேட் மூடப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.