விராலிமலையில் மீண்டும் புறக்காவல் நிலையம் செயல்படுமா?


விராலிமலையில் குற்றச்சம்பவங்களை தடுக்க புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்படுத்த பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதுக்கோட்டை

விராலிமலை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையானது பல்வேறு தொழிற்சாலைகள் நிறைந்த வணிக பகுதியாக விளங்கி வருகிறது. இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை இருப்பதால் அனைத்து ஊர்களுக்கும் எளிதில் சென்றுவரக்கூடிய மையப்பகுதியாக இருப்பதால் இங்கு எந்நேரமும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து இங்கு வேலைக்கு வருபவர்கள் வாடகை வீட்டில் தங்கியும், நாளடைவில் இங்கேயே சொந்தமாக இடம் வாங்கி வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

மேலும் இங்கு பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இங்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் முன்பு இல்லாத வகையில் பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக விராலிமலை திகழ்கிறது.

குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு

இவ்வாறு சிறப்பு மிகுந்த பகுதியாக விராலிமலை உள்ளதால் அதனை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து வழிப்பறி செய்தல், இரவு நேர கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஆயுதங்களைக்காட்டி திருடுதல், வீடுகள், கடைகள் ஆகிய இடங்களில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் உள்ளிட்டவைகளை திருடிச்செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் விதமாக போலீசார் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கடைகள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செயலிழந்த கண்காணிப்பு கேமராக்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரவு நேர டீக்கடையில் நின்ற திருநங்கையை மர்ம ஆசாமிகள் கத்தியால் தாக்கி அவரிடமிருந்த செல்போனை பறித்து சென்றனர். இதேபோல் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஊழியர்களிடம் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்ற சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

அதற்கு காரணம் தப்பிக்க ஏதுவாக அருகிலேயே தேசிய நெடுஞ்சாலை இருப்பதும், முக்கிய இணைப்பு சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததும், ஏற்கனவே அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் பராமரிப்பின்றி செயலிழந்து இருப்பதுமே முக்கிய காரணம் என போலீசார் கூறுகின்றனர். மேலும் குற்றவாளிகளை பிடிப்பதில் சுணக்கம் ஏற்படுவதற்கு 208 குக்கிராமங்களை உள்ளடக்கிய விராலிமலை போலீஸ் நிலையத்தில் குறைந்த எண்ணிக்கையில் போலீசார் இருப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

புறக்காவல் நிலையம்

கந்தசாமி:- விராலிமலை பகுதியில் குற்றச்சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் போலீஸ் கண்காணிப்பு பணி செய்ய வசதியாகவும், பொதுமக்கள் நலன் காக்கவும் விராலிமலை சோதனைச்சாவடி மற்றும் காமராஜர் நகர் ஆகிய 2 இடங்களில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு எந்நேரமும் பீட் போலீசார் பணியில் ஈடுபட்டு அவ்வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்து அனுப்புவார்கள். அதனால் போலீசார் குற்றச்சம்பவங்களையும் போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்து வந்தனர். இதனால் சமூக விரோதிகள் குற்றம்புரியும் எண்ணத்துடன் விராலிமலை பகுதிக்குள் நுழைய அச்சப்பட்டனர். ஆனால் அந்த புறக்காவல் நிலையம் இரண்டையுமே காரணமின்றி அப்புறப்படுத்தப்பட்டது. அதனை மீண்டும் அமைக்க போலீசார் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே அந்த 2 இடங்களிலும் மீண்டும் புறக்காவல் நிலையம் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

ரோந்து பணி

செந்தில்:- விராலிமலை பகுதியானது முன்பு இருந்ததைக்காட்டிலும் தற்போது மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து அதிகரித்து பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை அமைத்து போலீசார் கண்காணிக்க வேண்டும். மேலும் விராலிமலையானது தொழிற்சாலை நிறைந்த பகுதியாக திகழ்வதாலும் திருச்சி, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் தேசிய நெடுஞ்சாலை இருப்பதால் சமூக விரோதிகள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு தப்பி செல்ல ஏதுவாக உள்ளது.

எனவே நகரின் முக்கிய இணைப்பு சாலைகளில் அதி நவீன கேமராக்கள் அமைக்கும் பட்சத்தில் அதிகளவில் குற்றச்சம்பவங்களை தடுக்க வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும். சந்தேகப்படும்படியான வெளி நபர்கள் யாரேனும் சுற்றித்திரியும் பட்சத்தில் அதனை உடனடியாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

விவரங்களை சேகரிக்க வேண்டும்


Next Story