தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்படுமா?
கரூர் ரெயில் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
பாலூட்டும் அறை
தமிழகத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் பாலூட்டுவதற்காக பாலூட்டும் அறை தனியாக செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இதேபோன்று பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி பல்வேறு ெரயில் நிலையங்களிலும் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் ெரயில் நிலைய வளாக நடைமேடையில் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த அறை பூட்டப்பட்ட நிலையில் உள்ளது.
கோரிக்கை
கரூர் ெரயில் நிலையத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான ெரயில்கள் வந்து செல்கின்றன. இதனால் கரூர் ரெயில் நிலையத்திற்கு வரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்டுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அந்த பாலூட்டும் அறையை திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கரூர் ரெயில் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-
பால் ஊட்டுவதில் சிரமம்
கரூரை சேர்ந்த வளர்மதி கூறுைகயில், கரூர் ெரயில் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான தாய்மார்கள் வந்து செல்கின்றார்கள். இதில் எக்ஸ்பிரஸ் மற்றும் லோக்கல் பாசஞ்சர் ெரயில் உள்ளிட்டவைகளில் பயணம் செய்யும் கை குழந்தையுடன் வரும் பெண்கள் ெரயில் நிலையத்தில் ெரயிலுக்காக காத்திருக்கின்றனர். அப்போது தங்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்டுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே கரூர் ெரயில் நிலையத்தில் உள்ள பாலூட்டும் அறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பராமரிப்பு செய்ய வேண்டும்
கரூரை சேர்ந்த மைதிலி கூறுகையில், கரூரில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ெரயில்களில் ஏராளமான பெண்கள் தங்கள் கைக்குழந்தையுடன் நெடுந்தூரம் பயணம் செய்கின்றனர். இவர்கள் அந்த ரெயிலுக்கு கரூர் ரெயில் நிலையத்தில் வெகுநேரம் காத்துகிடக்கின்றனர். இதில் சில பச்சிளம் குழந்தைகள் பசி தாங்காமல் அழும்போது, அந்த குழந்தையின் தாய் பாலூட்டுவதற்கு தகுந்த சூழ்நிலை இல்லை. எனவே கரூர் ரெயில் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை நாள்தோறும் திறந்து பராமரிப்பு செய்ய வேண்டும்.
பயன்பாட்டிற்கு விட வேண்டும்
கரூரை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் சாமுவேல், கரூர் ெரயில் நிலையத்தில் அவ்வப்போது கூட்டம் நிறைந்து காணப்படும். இந்நிலையில் கைக்குழந்தைகளுடன் ெரயில் நிலையத்திற்கு வரும் பெண்கள் பொது இடங்களில் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பொழுது மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அவர்களின் சிரமங்களை தவிர்க்க இங்கு தாய்மார்கள் பாலூட்டும் அறை கட்டப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எனவே அந்த அறையை நாள்தோறும் திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.