தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகள் முழுமை பெறுமா?
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகள் முழுமை பெறுமா? என எதிர்பார்க்கின்றனர்.
பாரத பிரதமராக வாஜ்பாய் இருந்த போது நாடு முழுவதும் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. விரைவான பாதுகாப்பான பயணம் என்ற நோக்கத்தில் நான்கு வழிச்சாலை திட்டம் அமல்படுத்தப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த நான்கு வழிச்சாலை திட்டத்தினை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டது.
சுங்கக்கட்டணம்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4,390 கி.மீ. இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 630 கி.மீ. தூரம் இந்த சாலை அமைந்துள்ளது.
இந்த சாலை அமைப்பு பணிச்செலவை ஈடுகட்ட மத்திய அரசு சுங்கச்சாவடிகளை அமைத்து நாடு முழுவதும் சுங்கக்கட்டணம் வசூலித்து வருகிறது.
கடந்த 2021-2022-ல் ரூ.12 ஆயிரம்கோடி வசூலிக்கப்பட்ட நிலையில் கடந்த 2022-2023-ல் ரூ.18 ஆயிரத்து 692 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 2027- 2028-ல் சுங்க கட்டணம் வசூல் ரூ. 69 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும் அப்போது பராமரிப்பு செலவுகள் ரூ.67 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும் உபரியாக ரூ.2ஆயிரம் கோடி கிடைக்கும் நிலையில் நான்கு வழி சாலையில் செல்லும் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள்
இந்தநிலையில் 60 கி.மீ. இடைவெளியில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என மத்தியமந்திரி நிதின் கட்காரி அறிவித்த நிலையிலும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது. 6 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பங்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது.
மதுரை- கன்னியாகுமரி இடையே நான்கு வழி சாலையில் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என மதுரை ஐகோர்ட்டில் முறையிட்டதன் பேரில் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றால் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்படும் என்று ஐகோர்ட்டு எச்சரித்தது. இதையடுத்து திருமங்கலத்தில் இருந்து கள்ளிக்குடி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் விருதுநகர்-சாத்தூர் இடையே முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத நிலை நீடிக்கிறது.
நடைமேம்பாலம்
பல இடங்களில் நான்கு வழிச்சாலையில் வாகன விபத்துகளால் தடுப்பு வேலி சேதமடைந்து சாலைகள் சேதமடைந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதை கண்டுகொள்ளாத நிலையே உள்ளது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2013-ம் ஆண்டு அப்போது எம்.பி.யாக மாணிக்கம் தாகூர் இருந்த போது விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பும், படந்தால் விலக்கிலும், நடைமேம்பாலங்கள் அமைக்க தலா ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பூமி பூஜை நடைபெற இருந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதால் அந்த ஏற்பாடு ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் நிறைவேறாமல் இருந்தது இதனை தொடர்ந்து தரைவழி போக்குவரத்து இணைமந்திரியாக பொறுப்பு ஏற்ற பொன் ராதாகிருஷ்ணனிடம் இதுபற்றி வலியுறுத்தி கூறிய போது அவரும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மண் பரிசோதனை
இதனை தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் பிரசாரத்திற்கு வந்திருந்த மத்திய தரைவழி போக்குவரத்து இணைமந்திரி வி.கே. சிங்கிடம் கூறிய போது அவரும் விரைவில் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என உறுதி அளித்துச் சென்றார். ஆனாலும் நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் பாராமுகமாகவே உள்ளனர்.
ஒவ்வொரு முறையும் மண் பரிசோதனை நடத்தப்படுவதோடு இத்திட்ட பணி முடங்கி விடுகிறது. தற்போது கலெக்டர் அலுவலகம் முன்பும், படந்தால் விலக்கிலும் மேம்பாலங்கள் அமைக்கப்படுமென தெரிவித்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் படந்தால் விலக்கில் முதலில் மேம்பாலம் அமைக்க மதிப்பீடு தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் இந்த பணிகள் இன்னும் தொடங்கவில்லை.
பொதுமக்கள் போராட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் வந்து செல்லும் நிலையிலும் தினசரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையிலும் இங்கு வாகன விபத்திற்கு அதிக வாய்ப்பு உள்ளதால் இந்த இடத்தில் மேம்பாலம் உடனடியாக கட்டப்பட வேண்டியது அவசியமாகும்.
கலெக்டர் அலுவலக வளாகம் அருகே மருத்துவக்கல்லூரி பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் அந்த இடத்திலும் விபத்துகளை தவிர்க்க தரைகீழ் பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. விருதுநகர்-சாத்தூர் இடையே அணுகு சாலைகள் அமைக்கப்படவில்லை என மக்கள் போராடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் அருகே புறவழிச்சாலையில் வடமலைகுறிச்சி சந்திப்பில் அணுகு சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் போராடினர். அப்போது தேசிய நெடுஞ்சாலைஆணைய அதிகாரிகள் எம்.எல்.ஏ. சீனிவாசன் முன்னிலையில் உடனடியாக தற்காலிகமாக பாலம் அமைக்கப்படும், பின்னர் அணுகு சாலை அமைக்கப்படும் என கூறினர். அதற்கும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
அகற்றப்படும்
மத்திய மந்திரி அறிவித்தபடி விருதுநகர்- சாத்தூர் இடையே எட்டூர் வட்டத்தில் உள்ள சுங்கச்சாவடி அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் விருதுநகர்- சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலையில் மேம்பாட்டு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
2 இடங்களில் மேம்பாலங்கள்
இதுகுறித்து வாகன ஓட்டிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
விருதுநகரை சேர்ந்த சிவகுருநாதன்:-
விருதுநகர்-சாத்தூர் இடையே வாகன விபத்துகளை தவிர்ப்பதற்காக 2 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து பல ஆண்டுகளாகியும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளது. மேலும் இப்பகுதியில் வாகன விபத்துகளால் தடுப்பு வேலி மற்றும் சாலைகள் சேதமடைந்த நிலையில் அதனை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விருதுநகர் புறவழிச்சாலையில் வடமலைகுறிச்சி விலக்கு அருகே அணுகுசாலை அமைக்கப்படவில்லை. ஆதலால் இப்பகுதியில் மேம்பாட்டு பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.
தடுப்பு வேலி
விருதுநகரை சேர்ந்த சக்திவேல்:-
விருதுநகர்-சாத்தூர் இடையே தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு வழிச் சாலையில் பல இடங்களில் தடுப்பு வேலி சேதமடைந்துள்ளன. கிராம விலக்கு பகுதி யில் சூரிய விளக்குகள் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனாலும் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் இப்பகுதியில் நான்கு வழிச்சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்த சாலை
அருப்புக்கோட்டையை சேர்ந்த மோகன்வேல்:-
மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அருப்புக்கோட்டையில் இருந்து எட்டயாபுரம் வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
நான்கு வழிச்சாலையில் உள்ள சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படாமல், குடிநீர் வசதியின்றி காட்சி பொருளாக இருந்து வருகிறது. மேலும் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள டிவைடர்களில் செடிகள் வளர்க்கப்படாமல் இருப்பதால் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களின் ஒளி வெளிச்சத்தால் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. மேலும் முக்கிய சந்திப்புகளில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படாததால் பெரிய அளவில் விபத்து ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள், நான்கு வழிச்சாலையில் பயணிக்கும் பயணிகளின் நலன் கருதி சாலை மற்றும் அடிப்படை வசதி பணிகளை மேம்படுத்த வேண்டும்.
நடவடிக்கை
ராஜபாளையத்தை சேர்ந்த ராமராஜ்:-
ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று வரை எந்தவித விரிவாக்கம் செய்யப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை எந்த திட்டத்திற்காக அமைக்கப்பட்டதோ அது நிறைவேறவில்லை.
ஒரு சில இடங்களில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. அதேபோல போதிய வெளிச்சம் இல்லாததால் இரவு நேரங்களில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆதலால் நெடுஞ்சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.