தாமரைக்குளம் ஊரணியை சுத்தப்படுத்தி கம்பி வேலி அமைக்கப்படுமா?


முக்கண்ணாமலைப்பட்டியில் உள்ள தாமரைக்குளம் ஊரணியில் ஆடு, மாடுகளின் கழிவுகள் கலக்கிறது. எனவே இதனை சுத்தப்படுத்தி கம்பி வேலி அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

தாமரைக்குளம் ஊரணி

அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டியில் தாமரைக்குளம் ஊரணி உள்ளது. இந்த ஊரணி தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும். இந்த ஊரணியில் உள்ளூர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாதாகோவில், புலன்பட்டி, வேளாம்பட்டி, புதூர், மேட்டுப்பட்டி, பாறைப்பட்டி, வேளாங்குளம், வவ்வாநேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிக்கும் இந்த ஊரணியில் தண்ணீர் எடுத்து சென்று வருகின்றனர்.

தாமரைக்குளம் ஊரணியை சுற்றி மூன்று புறமும் மலைகளும், ஒருபுறம் சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளதால் வெளியே இருந்து இந்த ஊரணிக்கு தண்ணீர் வர இயலாது. மழை பெய்தால் மட்டுமே மலை மீது விழும் தண்ணீரும், உள்ளே விழும் நீரைக் கொண்டுதான் இந்த ஊரணி நிரம்ப வேண்டும். இந்த ஊரணி மலை மீது கால்நடைகளான ஆடு, மாடுகளின் சாணங்கள், குப்பைகள் அதிகளவு உள்ளன. அவை காற்று வீசும்போது ஊரணியில் விழுந்து தண்ணீரில் கலக்கின்றன.

கால்நடை கழிவுகள்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் இளைஞர்கள் சிலர் உதவியுடன் ஊரணி தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அதன்பின் மரம், செடிகளின் இலைகள், குப்பைகள், ஆடு, மாடு கழிவுகள் இந்த ஊரணியில் கலந்தன. இதனால் தண்ணீர் மாசடைந்துள்ளது. இதன்காரணமாக இந்த ஊரணி தண்ணீரை குடிநீராக பயன்படுத்த அப்பகுதி மக்கள் சிலர் தயக்கம் காட்டுகின்றனர்.

எனவே ஊரணியை சுத்தம் செய்து, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் கழிவுகள் கலக்காமல் இருக்க இரும்பு கம்பி வேலி அமைத்து குடிநீரை பாதுகாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

இரும்பு வேலி அமைக்க வேண்டும்

முகமது அப்துல்லா:- முக்கண்ணாமலைப்பட்டி முகையதீன் ஆண்டவர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தாமரைக்குளம் ஊரணி 100 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். முக்கண்ணாமலைப்பட்டி கிராமம் மட்டுமல்லாமல் புலன்பட்டி, மாதாகோவில், மேட்டுப்பட்டி, வேளாங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களும் குடிநீருக்கு இதை பயன்படுத்துகின்றனர். இந்த ஊரணியில் கால்நடைகள் குடிநீருக்காக இறங்குவதும், குளிப்பதால் தண்ணீர் மாசடைகிறது. இதனால் இப்பகுதி மக்கள் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த ஊரணியை காக்க சுற்றிலும் இரும்பு கம்பி வேலி அமைத்து ஆடு, மாடுகள் இறங்காமலும், குளத்தில் கழிவுகள் சேராமலும் பாதுகாக்க வேண்டும்.

சுவை மிகுந்த தண்ணீர்

ஷாஜஹான்:- முக்கண்ணாமலைப்பட்டி தாமரைக்குளம் ஊரணி தண்ணீரை தான் எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் இன்றுவரை குடித்து வருகிறேன். இந்த தண்ணீர் மிகுந்த சுவை கொண்டதாகும். தற்போது மலை மீது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அதிகளவில் உலா வருகின்றன. மேலும் அதன் சாணங்கள் மற்றும் குப்பைகள் காற்றின் மூலம் ஊரணியில் கலக்கிறது. இதனால் குடிநீர் சுகாதாரமற்று காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமண மாலைகள்

ஆசியாபானு:- தாமரைக்குளம் ஊரணியில் திருமண மாலைகளை சிலர் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் தண்ணீரில் வாடை வீசுகிறது. மேலும் இந்த ஊரணி அருகே ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் பிடித்து வருகிறோம். அதிலும் குப்பைகள், தூசிகள் அதிகளவு வருகிறது. இதனால் குழாயில் பிடிக்கும் தண்ணீரில் கூட துணியால் வடிகட்டி பிடித்து அதனை பயன்படுத்தி வருகிறோம்.

குப்பை, கழிவுகள்

ரகுமத்துல்லா:- இந்த ஊரணிக்கு அருகே வசித்து வருகிறேன். பல ஆண்டுகளாக குடிப்பதற்கும், சமைப்பதற்கும் இந்த தண்ணீரை பயன்படுத்துகிறோம். தற்போது ஒரு குடம் தண்ணீரை எடுத்து வந்து வடிகட்டினால் அதில் 50 கிராம் அளவுக்கு குப்பைகளும், கழிவுகளும் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த ஊரணியை ஆய்வு மேற்கொண்டு இரும்பு கம்பி வேலி அமைத்து ஆடு, மாடுகள் இறங்காமலும், குளத்தில் கழிவுகள் சேராமலும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story