பூட்டியே கிடக்கும் சிறுவர் பூங்கா திறக்கப்படுமா?
தஞ்சை அருங்காட்சியக வளாகத்தில் பூட்டியே கிடக்கும் சிறுவர்களுக்கான பூங்கா திறக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
அருங்காட்சியகம்
தஞ்சை மாநகரின் மையப்பகுதியில் பழைய கோர்ட்டு சாலையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகமாக செயல்பட்ட இந்த கட்டிடமானது பிரிட்டிஷ் கட்டிட வல்லுனர் ராபர்ட் சிஷோலம் என்பவரால் கடந்த 1896-ம் ஆண்டு முதல் 1900-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் கட்டப்பட்டது. இது இந்தோ-சாரா சனிக் கட்டிடக்கலை பாணியை சார்ந்தது.பழைமை வாய்ந்த இந்த கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக முதன்மை கட்டிடத்தை அருங்காட்சியமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.9.4 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. பழமை மாறாமல் மக்களை கவரும் வகையில் அருங்காட்சியக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சி அளித்து வருகிறது.
இந்த அருங்காட்சியகத்தில் உலோக சிற்ப காட்சியகம், கற்சிற்க காட்சியகம், நிலஅளவீட்டுத்துறை காட்சியறை, சரஸ்வதிமகால் நூலக காட்சியறை, தாரகைகள் கைவினைப்பொருட்கள் விற்பனை அறை, புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், பழங்கால வேளாண் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சிறுவர்களுக்கான பூங்கா
சிறுவர்களுக்கான ரெயிலும் இயக்கப்படுகிறது. இசை நீரூற்று உள்ளது. முதன்மைக்கட்டிடத்தின் பின்புறம் புதர் அடர்ந்து கிடந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு ஏறத்தாழ 2 ஏக்கரில் ராஜாளி பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் 20 நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான பறவைகள் உள்ளன. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ளது போன்றே இங்கும் பறவைகள் நம் மீது அமருகின்றன. அதற்கு நாமே இரை போடலாம். இந்த அருங்காட்சியக வளாகத்தில் 7 டி திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு திகில் நிறைந்த காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.
மேலும் முதன்மைக்கட்டிடத்தின் பக்கவாட்டில் சிறுவர்களுக்கான பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சறுக்கு, ராட்டினம், ஊஞ்சல் உள்ளிட்ட சிறுவர்களுக்கான உபகரணங்கள் உள்ளன.இந்த பூங்கா திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. அருங்காட்சியகத்திற்கும், ராஜாளி பூங்காவிற்கும் குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.விடுமுறை நாட்களில் அதிகபேர் வருகின்றனர். அப்படி வரக்கூடிய குழந்தைகள் விளையாடுவதற்கு வசதியாக இந்த பூங்காவை திறக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.