8 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் நூலகம் திறக்கப்படுமா?
மரவாபாளையத்தில் 8 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் நூலகம் திறக்கப்படுமா? என மாணவ-மாணவிகள் எதிர்பார்த்துள்ளனர்.
பூட்டியே கிடக்கும் நூலகம்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதி மெயின் ரோட்டில் கடந்த சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நூலகம் கட்டப்பட்டது. இந்த நூலகத்தில் தினசரி நாளிதழ்கள், பல்வேறு வகையான நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு நூலகர் நியமிக்கப்பட்டார்.
இங்கு அப்பகுதியை சேர்ந்த வாசகர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் வந்து நூல்களையும் படித்து வந்தனர். மேலும் பொதுவான தேர்வுகளுக்கு செல்பவர்கள் பல்வேறு நூல்களை படித்து தேர்வுக்கு தயாரானார்கள். இந்நிலையில் நூலகர் நூலகத்துக்கு வராததால் 8 ஆண்டுகளுக்கு மேலாக நூலகம் பூட்டிய படியே உள்ளது.
எதிர்பார்ப்பு
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் நூலகத்தை திறந்து வைக்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நூல்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எப்போது நூலகம் திறக்கப்படும் என வாசகர்கள், மாணவ-மாணவிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-
திறக்க ேவண்டும்
மரவாபாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன்:-
கடந்த சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் எங்கள் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள், வாசகர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அப்போதைய ஊராட்சி நிர்வாகம் மூலம் இந்த பகுதிக்கு புதிய நூலக கட்டிடத்தை கட்டி நூலகத்துக்கு தேவையான அனைத்து நூல்களையும் வாங்கி வைத்தனர். அதேபோல் நூல் நிலையத்திற்கு ஒரு நூலகர் நியமிக்கப்பட்டார். உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து படித்து வந்தனர். ஆனால் திடீரென நூலகத்தை பூட்டி விட்டனர். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து நூலகத்தை திறந்து வைக்க வேண்டும்.
பயனற்று போனது
புங்கோடை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம்:-
மரவாபாளையத்தில் நூலகம் இருந்தபோது நாங்கள் தினமும் அங்கு சென்று தினசரி நாளிதழ்களை படித்து கொண்டு பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்டோம். அதேபோல் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் காலையில் சென்று அவர்களுக்கு தேவையான நூல்களை பள்ளிக்கு செல்லும் முன் படித்துவிட்டு சென்றனர். ஆனால் திடீரென நூலகம் பூட்டப்பட்டு விட்டதால் அந்த நூலகம் பயனற்று போய்விட்டது. எனவே ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நூலகத்தை திறக்க நடவடிக்கை வேண்டும்.
ஆர்வத்துடன் படித்து வந்தோம்
மரவாபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயராம்:- மரவாபாளையம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வாசகர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் வேண்டுகோளை ஏற்று வாசகர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நூல்கள் இருந்தன. ேமலும், உள்ளூர் பகுதிகளை சேர்ந்தவர்களும், அந்த வழியாக செல்பவர்களும் இந்த நூலகத்திற்கு வந்து நூல்களைப் படித்து சென்றனர்.
உள்ளூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் காலை எழுந்தவுடன் நாளிதழை படிப்பதற்கு ஆர்வமுடன் வந்து படித்துச் சென்றனர். இது தொடர் கதையாக இருந்து வந்தது. தற்போது நூலகம் திறக்கப்படாமல் உள்ளதால் நாளிதழ்களைப் படிக்க முடியாமல் நாட்டு நடப்புகளையும், அரசு அறிவிக்கும் செய்திகளையும் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இந்த நூலகத்திற்கு ஒரு நூலகரை நியமனம் செய்து தினசரி திறந்து வைக்க உள்ளாட்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படிப்பறிவு வளரும்
வேட்டமங்கலம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன்:-
நூலகம் பூட்டியே கிடப்பது குறித்து ஒரு அக்கறையும் இல்லாமல் அப்படியே விட்டு விட்டார்கள். இதனால் நூல்கள் வீணாகி வருகிறது. இதனால் யாருக்கும் எந்த ஒரு நன்மையும் கிடைக்காமல் போய்விட்டது. படிப்பறிவை வளர்க்கும் வகையில் நூலகம் திறக்கப்பட்டால் அனைத்து தரப்பினரும் பயன் அடைவார்கள். மேலும் பள்ளி கல்லூரி மாணவிகளும் தங்களது படிப்பறிவை வளர்த்துக் கொள்வார்கள். எனவே உடனடியாக இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.