சிங்கப்பெருமாள் கோவில் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டமா? 3 கன்றுகுட்டிகளை கடித்து குதறியதால் பரபரப்பு


சிங்கப்பெருமாள் கோவில் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டமா? 3 கன்றுகுட்டிகளை கடித்து குதறியதால் பரபரப்பு
x

சிங்கப்பெருமாள் கோவில் அருகே 3 கன்றுகுட்டிகள் கடித்து குதறப்பட்டு இறந்ததால் அந்த பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்று வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு

3 கன்று குட்டிகள் சாவு

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த பகுதியில் உள்ள ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்காக அருகாமையில் உள்ள வனப்பகுதியில் செல்வது வழக்கம். இவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் கட்டப்பட்டிரு்தது. காலையில் எழுந்து பார்த்தபோது வாயில் கடிப்பட்ட நிலையில் கன்றுகுட்டி இறந்து கிடந்தது.

இதுபோல நேற்றும் 2 கன்றுக்குட்டிகள் மர்ம விலங்கால் கடிபட்டு இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தென்மேல்பாக்கம் கிராம மக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறையினர் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை, வனத்துறை அதிகாரிகள் தென்மேல்பாக்கம் கிராமத்தில் முகாமிட்டு ஆய்வு செய்தனர்.

கண்காணிப்பு கேமராக்கள்

கன்றுகுட்டிகள் எப்படி இறந்தது? எந்த விலங்கு கடித்தது? என்று விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து நிருபர்களிடம் செங்கல்பட்டு வன அலுவலர் கமல் கூறியதாவது:-

தென்மேல்பாக்கம் பகுதியில் 3 கன்றுகுட்டிகள் உயிரிழந்துள்ளது. தென்மேல்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள வனப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை.

எனவே முதல் கட்டமாக 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கன்றுகுட்டிகளை கடித்து குதறிய மர்ம விலங்கு எது? என்பதை முதலில் கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளோம்.

அச்சப்பட வேண்டாம்

கடந்த 2014-ம் ஆண்டு அஞ்சூரில் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த சிறுத்தை 100 கிலோ எடை கொண்டது. அந்த சிறுத்தை தற்போது உயிரோடு இருக்கிறதா? என்பதும் தெரியவில்லை

தென்மேல்பாக்கம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம், அதன் தடயங்கள் எதுவும் இல்லை. மக்களும் நேரடியாக யாரும் சிறுத்தையை பார்க்கவில்லை. எனவே மக்கள் அச்சபட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர் மதியழகன் கூறியதாவது:-

மக்கள் யாரும் சிறுத்தையை நேரில் பார்க்கவில்லை. எந்த விலங்கு தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்தது என்பது தெரியவில்லை? பெரிய விலங்காக இருந்தால் அதிக கறிகளை சாப்பிட்டு இருக்கும். சிறிய விலங்காகத்தான் இருக்க வேண்டும். கன்றுகுட்டியை தாக்கி ஒன்று அல்லது 2 கிலோ கறியை மட்டுமே மர்ம விலங்கு சாப்பிட்டுள்ளது. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

நடமாட்டம் உள்ளதா?

அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சூர், மற்றும் ஈச்சங்கரணை கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருந்தது. அப்போது நாய் மற்றும் மாடுகளை கடித்து கொன்றது. தற்போது தென்மேல்பாக்கம் கிராமத்தில் சிறுத்தையின் கால் தடங்கள் உள்ளது. தென்மேல் பாக்கம் மற்றும் அஞ்சூர் ஊராட்சியை சுற்றி வனப்பகுதி உள்ளது. வனத்துறை அதிகாரிகள் தென்மேல்பாக்கம் கிராமத்தில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story