நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலுக்கு அரசு கை கொடுக்குமா?
நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலுக்கு அரசு கை கொடுக்குமா? என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.
அன்றைய தினம் சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து வீட்டில் மாக்கோலமிட்டு புது மண்பானையில் பொங்கலிடுவது தமிழர்களின் மரபு. பொங்கல் வருவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே வீட்டிற்கு வர்ணம் பூசி, பழைய பொருட்கள் எல்லாவற்றையும் கழித்து பொங்கலை மகிழ்ச்சியுடன் வரவேற்பது நமது பராம்பரிய வழக்கம்.
சூரிய வழிபாடு
தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் பொங்கல் திருநாள்தான் தமிழ் கலாசாரத்தின் வெளிப்பாடாகவும் விவசாயிகளின் உழைப்பின் மேன்மையை உணர்த்தும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் மண்பானைகளில் பொங்கல் வைக்கும் வழக்கம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இன்னும் நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மண் பானை முதல் பித்தளை பானை வரை பயன்படுத்தி பொங்கலிட்டு சூரியனை வழிபடுவர். பெரும்பாலும் கிராமப்புற மக்கள் மண் பானையையே பொங்கலுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் பொங்கல் வந்தால் மண்பானைகளுக்கான தேவை அதிகரித்துவிடும்.
பொங்கல் பானை
இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறமாக தற்போது ஒரு சில இடங்களில் பித்தளை மற்றும் சில்வர் பானைகளில் பொங்கலிடும் வழக்கம் மெல்ல மெல்ல தலை தூக்கி வருகிறது. இதையெல்லாம் தாண்டி சில இல்லத்தரசிகள் குக்கரிலேயே பொங்கல் வைத்துவிடுகிறார்கள். எனினும் மண்பானையில் பொங்கல் வைக்கும் கலாசாரம் இன்னமும் குறையவில்லை.
அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களை காட்டிலும் தற்போது நகர்புறங்களில் பெரும்பாலானோர் மண்பானையில் பொங்கல் வைக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் அடுப்பு, பொங்கல் பானை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பரம்பரை ெதாழில்
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள குலாலர் தெருவில் மண்பாண்டம், பானை, அடுப்புகள், கார்த்திகை தீப விளக்குகள், மண் சட்டிகள், கலயங்கள், செங்கல் தயாரிப்பு என மண்பாண்டம் சார்ந்த பணிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மண்பானைகளுக்கு என்று தனி மவுசு உண்டு. இதனால் விருதுநகர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் எண்ணற்ற பேர் இங்கு வந்து பொங்கல் பானைகளை வாங்கி செல்கின்றனர். பொங்கல்பானையின் சிறப்புகள் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் தொழிலாளர்கள், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
மாட்டு வண்டி
மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளி அழகம்மாள்:-
நாங்கள் பரம்பரை, பரம்பரையாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். தினமும் 50 முதல் 100 பானைகளை உற்பத்தி செய்து வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கிறோம். எங்களது முன்னோர்கள் மாட்டு வண்டிகளில் கிராமம், கிராமமாக மண்பானைகளை விற்பனை செய்தனர். பழங்காலத்தில் மண்பாண்டங்களின் பயன்பாடு அதிகமாக காணப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உற்பத்தியாகும் பானைகளுக்கு தனி மவுசு உண்டு. பொங்கலையொட்டி பானைகள், அடுப்புகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு பானைகள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இருப்பினும் மண்பாண்ட தொழிைல பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நலிவடைந்து வரும் தொழில்
பெருமாள் பிச்சை:- தற்போது மண் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது. ஆதலால் மண்பாண்ட தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. மண் கிடைக்காத காரணத்தினால் விலையும் ஏற்றமாக உள்ளது.
இ்ந்த தொழிலை நம்பி எண்ணற்ற குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இவர்களுக்கு ேதவையான மண் உள்ளிட்ட பொருட்களை வழங்கி, தொழில் செய்வதற்கு தேவையான கடனுதவிகளையும் வழங்கி இந்த தொழில் மேலும் வளர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் மண் பானைகளை வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி சென்று விடுகின்றனர். பின்னர் அவர்கள் இந்த பானைகளுக்கு பெயிண்ட், கோலமிட்டு விற்பனை செய்கின்றனர். நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலுக்கு அரசு கை கொடு்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.
சீர்வரிசை
வத்திராயிருப்பு திலகம்:-
தைத்திருநாள் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழங்காலத்தில் தைப்பொங்கல் அன்று தங்களது வீடுகளுக்கு முன்பு மண்பானையில் பொங்கலிட்டு சுவாமிக்கு படைத்து வழிபட்டு வந்தனர். ஆனால் நவீன காலத்திற்கு ஏற்ப சில்வர் பாத்திரங்கள், வெண்கல பாத்திரங்கள், குக்கர் உள்ளிட்டவற்றில் பொங்கல் வைக்கின்றனர். புது தம்பதிகளுக்கு பெண் வீட்டாரின் சார்பில் பொங்கல் பானை, மஞ்சள் கிழங்கு, கரும்பு, அரிசி, புதிய ஆடைகள் மற்றும் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சீராக கொடுப்பது வழக்கம். இந்த பொங்கல் சீர்வரிசையில் கண்டிப்பாக பொங்கல்பானை இருக்கும்.
புது தம்பதிகளுடன் இரு குடும்பத்தினரும் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்வர். ஆனால் தற்போது இந்த கலாசாரம் மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. தங்களது பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் காலங்கள் மாறினாலும் நமது பாரம்பரிய முறைப்படி தை திருநாளை அனைவரும் கொண்டாட வேண்டும்.
அடுப்பு ரூ.200
ராஜபாளையம் சுப்புலட்சுமி:-
தைப்பொங்கல் விழாவையொட்டி மண்பானைகள், அடுப்பு ஆகியவற்றை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வாங்கி வந்து பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறோம். இதற்கு நாங்களே வர்ணம் பூசி இப்பகுதியில் விற்பனை செய்கிறோம். கடந்த ஆண்டை விட தற்போது விலை அதிகமாக இருக்கிறது. பழங்காலத்தில் பாரம்பரியமாக பொங்கல் பானைகள், அடுப்பு செய்வதற்கு ராஜபாளையம் பகுதியில் பணியாளர்கள் இருந்தார்கள். இதனால் விலைகள் குறைந்து இருந்தன. தற்போது வெளியூரிலிருந்து வாங்கி வருவதால் அடுப்பு விலை ரூ.200-க்கு விற்பனை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மண்பாண்டங்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து சமூக வலைதளங்களில் பரவியது. இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் மண்பாண்டங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.