கால்பந்து மைதானம் நவீனப்படுத்தப்படுமா?
வால்பாறையில் உள்ள கால்பந்து மைதானம் நவீனப்படுத்தப்படுமா? என்று விளையாட்டு வீரர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் உள்ள கால்பந்து மைதானம் நவீனப்படுத்தப்படுமா? என்று விளையாட்டு வீரர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கால்பந்து மைதானம்
வால்பாறை பகுதியில் இயற்கை எழில் சூழலில் கக்கன்காலனி, திருவள்ளுவர் நகர் குடியிருப்புகளுக்கு மத்தியில் கால்பந்து மைதானம் அமைந்துள்ளது. இது ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது நகராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு ஆரம்ப காலத்தில் பல்வேறு கோப்பைகளுக்கான போட்டிகள் நடைபெற்று வந்தது. மேலும் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக மைதானத்தில் எந்தவித பராமரிப்பு பணிகளும் செய்யப்படவில்லை. இதனால் புதிதாக போட்டிகள் நடத்துவதில் சிக்கல் இருந்து வருகிறது.
பார்வையாளர் மாடம்
இதுகுறித்து வால்பாைறயை சேர்ந்த கால்பந்து வீரர்கள் கூறியதாவது:-
வால்பாறையில் கால்பந்து விளையாட்டு பிரபலம். தற்போது உள்ள மைதானத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. மேலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது.
எனவே மைதானத்தை முறையாக பராமரிக்க வேண்டும். பார்வையாளர் மாடம் அமைப்பதோடு அருகில் உள்ள காலியிடத்தில் உடற்பயிற்சி கருவிகள், கைப்பந்து மைதானம், இறகு பந்து மைதானம் அமைக்க வேண்டும். மேலும் மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள பாதை அமைத்து நவீனப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.