உழவர் சந்தை மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?


உழவர் சந்தை மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?
x

உழவர் சந்தை மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?

திருவாரூர்

திருவாரூரில் உழவர் சந்தையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கடைகளை வாடகை இன்றி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

உழவர் சந்தை

காய்கறி பயிர் செய்யும் விவசாயிகள் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்யாமல் நேரடியாக நுகர்வோரிடம் நல்ல லாபத்தில் விற்பனை செய்ய தமிழக அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் உழவர் சந்தைகளை அமைத்தது. அதன் அடிப்படையில் கடந்த 1999-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உழவர் சந்தை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2000-ம் ஆண்டு மன்னார்குடி, திருவாரூரில் உழவர் சந்தைகளை திறந்தது.

விவசாயிகள் காய்கறிகளை கட்டணம் இல்லாமல் அரசு பஸ்களில் எடுத்து வந்து விற்பனை செய்திடவும், இலவசமாக கடைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் எடை அளவினை சரியாக வழங்கிட தராசும் இலவசமாக வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இடையே இணைப்பினை ஏற்படுத்தி, இருவரும் பயன் பெறும் நோக்கத்துடன் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. தற்போது மன்னார்குடி உழவர் சந்தை இதுநாள் வரை சிறந்த சந்தையாக இருந்து வருகிறது.

பெயர் பலகை மட்டுமே

திருத்துறைப்பூண்டி உழவர் சந்தை தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில் திருவாரூர் உழவர் சந்தை என்பது நீண்டகாலமாக செயல்பட்டில் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த உழவர் சந்தை நகரின் பழைய பஸ் நிலையம் அருகில் பரபரப்பான கடைவீதியில் அமைந்து இருந்தும் பல்வேறு காரணங்களால் செயல்படாமல் உள்ளது.

குறிப்பாக திருவாரூர் உழவர் சந்தை கடைகள் வாடகை விடப்பட்டன. இதனால் கடைகளை விவசாயிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகளை விற்பனை செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டது. உழவர் சந்தை செல்லும் வழிபாதை ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் உழவர் சந்தைக்கு மக்கள் வருகையும் குறைந்தது. தற்போது உழவர் சந்தை என்ற பெயரில் பெயர் பலகை மட்டுமே உள்ளது.

உரிய வசதி செய்து தர வேண்டும்

இதனால் நாள்தோறும் கிராமங்களில் இருந்து காய்கறி கொண்டு வரும் விவசாயிகளிடம் விற்பனை செய்ய கடைகள் வசதியின்றி வியாபாரிகளிடம் கிடைத்த விலைக்கு விற்பனை செய்து வரும் அவல நிலை இருந்து வருகிறது. எனவே உழவர் சந்தைகள் மற்ற மாவட்டங்களை போன்று கட்டமின்றி வழங்குவது போல், திருவாரூர் மாவட்டத்தில் மாத வாடகைக்கு கடைகளை விடாமல், தினசரி வருகை விவசாயிகளுக்கு ஏற்றார்போல் கடைகளை வாடகை இன்றி சுழற்சி முறையில் வழங்க வேண்டும். மேலும் உழவர் சந்தை பாதையை சீரமைத்து மக்கள் வந்து செல்வதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து திருவாரூர் பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பையன் கூறுகையில்,

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பகுதியில் கூட உழவர் சந்தை தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில் திருவாரூர் உழவர் சந்தை செயல்படாமல் உள்ளது. விவசாயிகள் இடைதரகர் இன்றி நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்திடும் நோக்கத்தில் உழவர் சந்தை கொண்டு வரப்பட்டது. ஆனால் திருவாரூர் உழவர் சந்தை செயல்படாததால், நாள்தோறும் விவசாயிகள் கொண்டு வரும் பொருட்களை வந்த விலைக்கு இடைதரகர்களிடம் விற்பனை செய்கின்ற நிலை நிலவுகிறது.

கட்டணம் இல்லாத கடைகள்

உற்பத்தி செய்கின்ற தரமான பொருட்கள், சரியான விலையில் மக்களுக்கு சென்று அடைவதற்கு உழவர் சந்தை உதவும். எனவே மாவட்ட தலைநகரான திருவாரூரில் உழவர் சந்தையை மீண்டும் செயல்படுத்தி, கட்டணமில்லாத கடைகளை விவசாயிகளுக்கு வழங்கி மக்களுக்கு தரமான காய்கறிகளை சரியான விலையில் கிடைக்க மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் இணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு பெறும் என்றார்.


Related Tags :
Next Story