பாழடைந்து கிடக்கும் சேமிப்பு கிடங்கு கட்டிடம் இடிக்கப்படுமா?


பாழடைந்து கிடக்கும் சேமிப்பு கிடங்கு கட்டிடம் இடிக்கப்படுமா?
x

பாழடைந்து கிடக்கும் சேமிப்பு கிடங்கு கட்டிடம் இடிக்கப்படுமா?

திருவாரூர்

மன்னார்குடியில் பாழடைந்து கிடக்கும் சேமிப்பு கிடங்கு கட்டிடத்தை இடிக்க வேண்டு்ம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வணிக வளாகம்

மன்னார்குடி வ.உ.சி. சாலையில் ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான பூ மாலை வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் ஒரு பகுதியில் உள்ள பழைய சேதமடைந்த கட்டிடத்தில் சிமெண்டு மற்றும் தளவாட பொருட்கள் சேமிப்பு கிடங்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல ஆண்டுகள் பழமையான ஒரு கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து செடிகள் வளர்ந்து பாழடைந்த நிலையில் உள்ளது. மேலும் மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்தும், சுவரில் விரிசல் ஏற்பட்டும் இடியும் நிலையில் உள்ளது.

மேற்கூரைகள் பெயர்ந்து

இந்த கட்டிடத்தில் தற்போதும் சில தளவாடப்பொருட்களை சேமித்து வைக்க ஊரக வளர்ச்சித்துறை பயன்படுத்தி வருகிறது. கட்டிடம் மிகவும் சேதமடைந்து உள்ளதால் தொழிலாளர்கள் உள்ளே சென்று வருவதற்கே அச்சப்படுகின்றனர். அதன் அருகில் உள்ள 1985-ம் ஆண்டு கட்டப்பட்ட மற்றொரு கட்டிடத்தில் திட்டப்பணிகளுக்கு தேவையான சிமெண்டு மூட்டைகளை சேமித்து வைக்க பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த கட்டிடமும் மேற்கூரைகள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் இந்த கிடங்குகளுக்குள் சென்று மூட்டைகளை அடுக்கி வைப்பதற்கும், எடுத்து வருவதற்கும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாழடைந்து கிடக்கும் சேமிப்பு கிடங்கு கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story