வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பொன்னை ஆறு தடுப்பணையின் தரைதளம் சீரமைக்கப்படுமா?
பொன்னை ஆறு தடுப்பணையின் தரைதளத்தை அதிகாரிகள் சீரமைப்பார்களா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
பொன்னை ஆறு தடுப்பணையின் தரைதளத்தை அதிகாரிகள் சீரமைப்பார்களா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
சோழர் ஆட்சி காலம் 'பொற்காலம்'
சோழர் ஆட்சி காலத்தில் நீர் மேலாண்மைத் திட்டத்தில் மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி விவசாயத்தை மேம்படுத்தினர். அத்துடன் மகசூலை அதிகரிக்கவும், குடிநீர் ஆதாரத்தைப் பெருக்கும் வகையிலும் ஆற்று வெள்ளம், மழை வெள்ளம், ஓடை வெள்ளப்பாதைகளை கண்டறிந்து அப்பகுதிகளில் அணைகள், தடுப்பணைகளை கட்டி தண்ணீரை தேக்கி வைத்தனர். மேலும் ஏரி, குளம் ஆகியவற்றை வெட்டி தண்ணீரை தேக்கி சேமித்து வைத்தனர்.
சேமித்த தண்ணீைர பொதுமக்கள் தங்களின் குடிநீர் பயன்பாட்டுக்கும், விவசாயிகள் வயல்களில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர் சாகுபடிக்கும் பயன்படுத்தி வந்தனர். அதன் மூலம் ஆண்டில் முப்போகமும் நெல் விளைச்சல் அதிகளவில் இருந்து வந்தது. நெல் உற்பத்தியில் சோழர் ஆட்சி காலம் ஒரு 'பொற்காலம்' என அழைக்கப்பட்டது.
தடுப்பணை
'நீவா நதி' என்னும் 'பொன்னை ஆறு' ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேஷாசலம் வனப் பகுதியில் உற்பத்தியாகிறது. சுமார் 83 கிலோ மீட்டர் தூரம் வரை கடந்தோடி வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா ஆந்திர மாநில எல்லையான பொன்னை அருகே தமிழகத்தில் தடம் பதித்து திருவலம் வழியாக மேல்விஷாரம் அருகே பாலாற்றில் கலக்கிறது.
பொன்னை ஆற்றுத் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த திட்டமிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பொன்னை மேல்பாடி அருகே 10-ம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி காலத்தில் 216.50 மீட்டர் நீளமும், 21.25 அடி உயரத்திலும் பொன்னை ஆற்றின் குறுக்ேக தடுப்பணை கட்டப்பட்டது. தடுப்பணையின் கீழ் பகுதியில் வெள்ளப்பாதிப்பின்போது ஏதேனும் சேதம் ஏற்படாமல் தடுக்க பாறைகள், கருங்கற்கள் ஆகியவற்றைக் கொண்டு தரைதளத்தை வலிமையாக அமைத்தனர்.
விளை நிலங்கள் செழிப்பு
அணைக்கட்டின் 2 பக்கமும் கால்வாய்கள் அமைத்து, அதன் மூலம் பாசனத்துக்கு தண்ணீரை வெளியேற்றுவது வழக்கம். அதன்படி பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டில் கிழக்கு, மேற்கு கால்வாய்கள் அமைத்து 2 கால்வாய்கள் மூலம் அணைக்கட்டில் இருந்து தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள். அந்தத் தண்ணீர் ஏரி, குளங்களுக்கு சென்று நிரம்பி விவசாயிகள் பயிர் பாசனத்துக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
பொன்னை அணைக்கட்டு தண்ணீரை பயன்படுத்தி ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், ஆந்திர மாநிலம் சித்தூர் ஆகிய மாவட்டங்களில் பல ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி ெபறுகிறது. பொன்னை தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் விவசாயத்தைப் பெருக்கி வருகின்றனர்.
அக்காலத்தில் பொன்னை ஆற்றுப்படுகை முழுவதும் இருந்த விளைநிலங்கள் செழிப்புடன் இருந்ததற்கு ஆதாரமாக பொன்னை ஆற்றுப்படுகையின் மேற்குக் கரையில் மேல்பாடி கிராமத்தில் அமைந்துள்ள சோமநாதீஸ்வரர் கோவில் ஆகும். அந்தக் கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பராந்தக சோழ மன்னரால் முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டு, ராஜராஜசோழ மன்னரால் குடமுழுக்கு செய்யப்பட்ட கோவில் ஆகும். இந்தக் கோவில் அப்போதைய செல்வச்செழிப்பின் அடையாளத்தை எடுத்துக்கூறும் விதமாக இப்போதும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
மதகுகள், இரும்புப்பலகை சேதம்
இந்தநிலையில் 2020-ம் ஆண்டு இறுதியில் பெய்த கனமழையின் காரணமாக பொன்னை ஆற்றில் பயங்கரமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் அணைக்கட்டு கிழக்கு, மேற்குப் பகுதிகளில் உள்ள மதகுகளும், இரும்புப்பலகைகளும் உடைந்து சேதமடைந்தன. சேதமடைந்த இரும்புப்பலகைகளை அதிகாரிகள் இன்னும் சீரமைக்காததால் அணைக்கட்டில் தண்ணீரை சேமிக்க முடியாமல் வீணாக வெளியேறி வருகிறது.
இந்த அணைக்கட்டு சுற்று வட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. எனவே வெள்ளப்பெருக்கில் உடைந்து சேதமடைந்துள்ள மதகுகளை சீரமைக்க வேண்டும். அணையில் இருந்து வெள்ளப்பெருக்கு செல்லும் முதல் தளத்தில் கிழக்குப் பகுதியில் 30 அடி நீளத்துக்கு தரைதளம் சேதமானது. அதேபோல மேற்குப் பகுதியிலும் 15 அடி நீளத்துக்கு தரைதளம் சேதமானது. அவைகளை சீரமைக்க ேவண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்பேரில் அப்போது மதகு இரும்புப் பலகையை மட்டும் அதிகாரிகள் சீரமைத்தனர். ஆனால், இது நாள் வரை சேதமான முதல் தரை தளம் சீரமைக்கப்படவில்லை.
ஏரிகள் நிரம்பின
அதைத்தொடர்ந்து 2021-ம் ஆண்டு இறுதியில் ஆந்திராவில் பெய்த கனமழையால் கலவகுண்டா அணை நிரம்பியதைத்தொடர்ந்து அணையில் இருந்து பொன்னை அணைக்கட்டு பகுதிக்கு வரலாறு காணாத அளவுக்கு 1930-ம் ஆண்டுக்கு பிறகு 2021-ம் ஆண்டில் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றின் இரு கரையும் புரண்டு ஓடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் அணைக்கட்டில் இருந்து கிழக்கு மற்றும் மேற்குக் கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பல ஏரிகள் நிரம்பின. அந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் அனைத்து ஏரிகளும் நிரம்பின. தொடர் மழையின் காரணமாக வானம் பார்த்த ஏரிகளும் நிரம்பி வேளாண் பயிர் பாசனத்துக்கும் பயன்பட்டது.
வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் அணைக்கட்டில் உள்ள ஆற்றின் தரைதளத்தின் முதல் தளத்தில் 2020-ம் ஆண்டு கிழக்கு, மேற்கு மதகு பகுதிகளில் சேதமான அந்தப் பகுதிகள் மீண்டும் வெள்ளத்தால் சேதமடைந்தது. அங்கு பதித்திருந்த பெரிய கருங்கற்கள் வெள்ளத்தால் அணைக்கட்டு பகுதியில் இருந்து சுமார் 100 அடி தூரம் வரை அடித்துச் செல்லப்பட்டன. சேதமான பகுதியில் 2-வது தளத்திலும் கருங்கற்கள் அடித்துச் செல்லப்பட்டு பெரும் பள்ளம் ஏற்பட்டது.
ஆய்வு செய்யவில்லை
தொடர்ந்து அணையின் கீழ் பகுதி வழியாக 4-ம் தளத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் வெளியேறியதால் தளம் மண் அரிப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் 5-வது தளம், 6-ம் தளம் வெள்ளத்தில் பெருமளவு அடித்துச் செல்லப்பட்டது. தளத்தின் மிச்சங்கள் மட்டும் ஆங்காங்கே காணப்படுகிறது.
அணையின் தரைதளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெரிய கருங்கற்கள் முழுவதும் அணையின் கிழக்குக் கரை, மேற்குக் கரை பகுதிகளில் 100 அடி தூரத்தில் குவியல் குவியலாகக் கிடக்கின்றன. 2020-ம் ஆண்டு, 2021-ம் ஆண்டு இறுதியில் அணைக்கட்டு சேதமடைந்த தரைப்பகுதிகளில் 21 மாதங்களாகியும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அணைக்கட்டு பகுதியைச் சீரமைக்க நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தண்ணீரை சேமிக்கவில்லை
மேலும் அணைக்கட்டு சேதமடைந்த தரைதள பகுதிகளை அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அணைக்கட்டின் மதகுகள், கிழக்கு, மேற்குக் கால்வாய் பகுதிகள் தரை தளம் முறையாக ஆண்டுதோறும் அதிகாரிகள் ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
அணைக்கட்டின் கிழக்குக் கால்வாய் பகுதியில் வடக்குக் கரை வெள்ளத்தில் 20 அடிக்கு மேல் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அப்போது தற்காலிகமாக மணல் மூட்டைகளை கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டது. ஆனால் அதையும் இன்று வரை அதிகாரிகள் சீரமைக்கப்படவில்லை. அதையும் உடனடியாக சீரமைக்க வேண்டும். அணைக்கட்டின் மதகு பகுதிகளில் ஆங்காங்கே வளர்ந்துள்ள செடிகளை அகற்றி மதகு சுவர்களை பாதுகாக்க வேண்டும். அணைக்கட்டின் உள்பகுதியில் வெள்ளத்தால் அடித்து வந்த மணல் முழுவதுமாக நிரம்பி அணை மட்டத்துக்கு மணல் குவிந்துள்ளது. அந்த மணலை அகற்றி நீரை ேசமிக்க வழி வகை செய்ய வேண்டும். ஆனால், அணைக்கட்டில் தற்போது வரை தண்ணீரை சேமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீரமைக்க வேண்டும்
மேலும் பொன்னையில் இருந்து திருவலம் வரை கரையோர கிராமங்கள் மற்றும் சோளிங்கர் நகராட்சிக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது பொன்னையாறு தான்.
மேலும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ெபான்ைன ஆற்றின் குறுக்கே இன்னும் கூடுதலாக அணைக்கட்டுகளை ஏற்படுத்தி, அதன் மூலம் தண்ணீரை சேமித்து குடிநீர் ஆதாரத்தைப் பெருக்க வேண்டும், எனப் பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக, அந்தந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதத்தில் தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன் அணைக்கட்டு பகுதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும். சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்காமல் விட்டால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அணைக்கட்டு உடைந்து போக வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் நடக்கும் முன் பொன்னை ஆற்றின் குறுக்ேக உள்ள அணைைய அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.