சேதமடைந்த தென்கரை வாய்க்கால் பாலம் புதிதாக கட்டப்படுமா?
மேலகுறப்பாளையம் பகுதியில் சேதமடைந்த தென்கரை வாய்க்கால் பாலம் புதிதாக கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தென்கரை வாய்க்கால்
கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம் வதியம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் மேலகுறப்பாளையம். இந்த கிராம பகுதி வழியாக தென்கரை வாய்க்கால் செல்கிறது. அதில் பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அந்த பாலம் பழுதடைந்த காரணத்தால் அந்த பாலம் முழுமையாக இடித்து அகற்றப்படுள்ளது. பின்னர் கடந்த 2001 ல் அங்கு புதிய பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலத்தை கடந்தே மேலகுறப்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு தேவையான இடு பொருட்கள் கொண்டு செல்வது போன்ற பணிகளையும் பயிர் விளைந்த பின்பு நெல், வாழை போன்றவற்றை அறுவடை செய்து மீண்டும் இந்த பாலம் வழியாகவே கொண்டு சென்று வருகின்றனர்.
உறுதித்தன்மை இழந்தது
வாய்க்காலில் பெரிய தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் பகுதியில் பாலம் கட்டப்பட்டிருந்தது. இந்தநிலையில் சுமார் 2 ஆண்டுக்கு முன்பு திடீரென இந்த பாலத்தின் மேற்பகுதியை தாங்கி நின்ற ஒரு அடிப்பகுதி தூண் உறுதித்தன்மை இழந்த காரணத்தால் மணலில் கீழே இறங்கிவிட்டது. இதனால் அந்தத் தூணில் இருந்த மேல் பகுதி இரண்டு பக்கமும் தொங்கிய நிலையில் இருக்கிறது.
இந்த பாலம் சேதமடைந்த காரணத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் இந்தப் பாலத்தின் ஒரு பகுதி தண்ணீரில் இடிந்து விழும் நிலை இருப்பதால் இந்தப் பாலத்தை பொதுமக்கள் விவசாயிகள் அச்சத்துடனேயே தினந்தோறும் கடந்து சென்று வருகின்றனர். இந்த பாலத்தை சீரமைக்க கோரி இப்பகுதி மக்கள் சார்பில் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஒருமுறை இப்பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு வந்த மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரிடம் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் அவரிடம் தெரிவித்தனர்.
எதிர்பார்ப்பு
அப்போது அவர் நேரிலேயே அந்த சேதம் அடைந்த பாலத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் இந்தப்பாலம் தொடர்ந்து கீழே இறங்கிக் கொண்டே இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் உடையக்கூடிய நிலையில் காணப்படுகிறது. தற்போதுவரை இந்த பாலத்தை சீரமைப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், மேலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த பாலத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கையை விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா? என எதிர்பபார்த்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். அதன்விவரம் பின்வருமாறு:-
கேள்விக்குறியாக உள்ளது
முத்துகாத்தான்:- மேலகுறப்பாளையம், கீழ குறப்பாளையம், கண்டியூர், வதியம், கே.பேட்டை, திமாச்சிபுரம் போன்ற பகுதியில் உள்ள பல விவசாயி நிலங்கள் மேல குறைபாளையம் பகுதியில் உள்ளது. இங்குள்ள இந்த சேதமடைந்த பாலம் வழியாகவே விவசாயிகள் சென்று வருகின்றனர். ஒரு வாழைத்தாரை சுமந்து செல்ல கூலியாக ரூ.20 கொடுக்கப்படுகிறது. இந்த பாலம் உடைந்து விட்டால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றே விலை பொருட்களை கொண்டு செல்ல முடியும்.
அப்படி கொண்டு செல்லும் பொழுது அதிகப்படியான கூலி கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு கூலியாகவே அதிக தொகை செலவிட நேரிடும். இதனால் விவசாயிகளுக்கு பெரிதும் நஷ்டமே ஏற்படும். சேதமடைந்த பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்ட ரூ.60 லட்சம் என அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர். அவ்வாறு மதிப்பீடு செய்த அதிகாரிகள் தற்பொழுது மாற்றல் பெற்று சென்று விட்டனர். புதிதாக வந்த அதிகாரிகள் தற்போது வரை இன்னும் பார்வையிட வரவில்லை. எனவே இந்த பாலம் கட்டப்படுவது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நிதி ஏற்பாடு
ரவிக்குமார்:- மேலகுறப்பாளையம் பகுதியில் உள்ள பாலம் சேதமடைந்து சுமார் 2 ஆண்டுகள் ஆகிறது. பல்வேறு மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் பார்வையிட்டும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் இந்த பாலம் உடைந்து விடும் நிலையில் உள்ளது. ஊராட்சி மன்றம் சார்பாக காலம் கட்ட நிதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறுகின்றனர் ஆனால் அது எந்த வகையில் உண்மை என்று தெரியவில்லை. உடனடியாக இந்த பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் பகுதி மக்களின் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
ரெயில்வே தண்டவாளத்தில்...
சுப்பிரமணியன்:-இந்த பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த பகுதி வழியாகவே விவசாயத்துக்கு தேவையான அனைத்து பணிகளையும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பால முற்றிலும் சேதமடைந்தால் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர் வழியாக ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து வந்தோ? அல்லது வாய்க்கால் கரை பகுதியில் நடந்து வந்தோ? விவசாயம் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. அதுபோல விவசாயம் செய்வது என்பது இயலாத ஒரு காரியம். ஏற்கனவே இருந்ததைவிட தற்போது இந்த பாலம் இறங்கிக் கொண்டே செல்கிறது. புதிய பாலம் கட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழப்பு ஏற்படும்
பிரதீப்:-இந்த பாலம் கட்டப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது.2 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த இந்த பாலத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பாலம் வழியாக பொதுமக்கள் நடந்து செல்லும் போது பாலம் உடைந்து விழுந்தால் உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுபோல விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.