பூம்புகாரில், சேதமடைந்த நூலக கட்டிடம் சீரமைக்கப்படுமா?
பூம்புகாரில், சேதமடைந்த நூலக கட்டிடம் சீரமைக்கப்படுமா? என வாசகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திருவெண்காடு:
பூம்புகாரில், சேதமடைந்த நூலக கட்டிடம் சீரமைக்கப்படுமா? என வாசகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நூலகம்
கடந்த 1996-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி மாணவர்களிடையே அறிவுத்திறனை பெருக்குவதற்காக அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் நூலகங்களை திறக்க ஏற்பாடு செய்தார்.
அதேபோல் நூலகத்துறை சார்பில் நூலகங்கள் மற்றும் ஊர் புற நூலகங்கள் கிராமங்கள் தோறும் திறக்கப்பட்டன. இந்த நூலகங்களில் தமிழகத்தில் உள்ள அறிஞர்களின் நூல்கள் படிப்பதற்காக வாசகர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
சேதமடைந்த கட்டிடம்
போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நூலகங்கள் மிகப்பெரிய உதவியாக உள்ளது. நூலகங்களுக்கு போதிய கட்டிட வசதிகள், பணியாளர் வசதிகள் குறைவாக இருப்பதாக வாசகர்கள் தெரிவித்து வருகின்றனர். பூம்புகாரில் நூலகம் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் இந்த நூலகத்திற்கு வந்து நூல்களை படித்து பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த நூலக கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இங்கு வரும் வாசகர்கள், மாணவர்கள் அச்சம் அடைகின்றனர். எனவே சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என வாசகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சீரமைக்க வேண்டும்
இது குறித்து அந்த பகுதி வாசகர்கள் கூறுகையில் இந்த நூலகத்தின் மூலம் வானகிரி, பூம்புகார், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நூலக கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
வாரத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே நூலகம் திறக்கப்படுகிறது.
எனவே சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைத்து தினந்தோறும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நூலக அலுவலர் பணி இடத்தை நிரப்ப வேண்டும் என்றனர்.