சேதமடைந்த சமுதாய கூடம் சீரமைக்கப்படுமா?
சேகரையில் சேதமடைந்த சமுதாய கூடத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமுதாய கூட கட்டிடம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள சேகரை கிராமத்தில் அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அரசு சார்பில் சமுதாய கூடம் கட்டிடம் கட்டப்பட்டது. கிராமப்புற ஏழை- எளிய மக்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், அரசு சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் ஏதுவாக கட்டப்பட்ட இந்த சமுதாய கூட கட்டிடத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சமுதாய கூட கட்டிடம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரையில் விரிசல்கள் ஏற்பட்டு மழை தண்ணீர் உள்பகுதியில் சென்று சேதத்தை ஏற்படுத்துகிறது.
சமூக விரோதிகளின் கூடாரம்
மேலும் கட்டிடத்தில் உள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சேதமடைந்து உள்ளது. இதனால் சேதமடைந்த சமுதாய கூடத்தை அந்த பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த சமுதாய கூட கட்டிடம் சமூக விரோதிகள் மது அருந்துவதற்கு ஏற்ற கூடாரமாக விளங்குகிறது.
இதனால் சமுதாய கூடத்தை அந்த பகுதி மக்கள் பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
சீரமைத்து தர வேண்டும்
எனவே சேதமடைந்த சமுதாய கூடத்தை சீரமைத்து தர வேண்டும். இல்லையெனில் சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக சமுதாய கூட கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.