கருங்கற்களை கொண்டு தடுப்பு அரண் அமைக்கப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமங்களை பாதுகாக்க கருங்கற்களை கொண்டு தடுப்பு அரண் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கொள்ளிடம்;
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமங்களை பாதுகாக்க கருங்கற்களை கொண்டு தடுப்பு அரண் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கொள்ளிடம் ஆறு
டெல்டா மாவட்டத்தில் முக்கிய வடிகால் மற்றும் பாசன வசதி அளித்து வருவதில் கொள்ளிடம் ஆறு முக்கிய பங்கு வகிக்கிறது. கொள்ளிடம் ஆறு அணைக்கரையில் இருந்து தனது வடிகால் பணியை தொடங்குகிறது. கர்நாடக மாநிலத்்தில் அதிக அளவில் மழை பெய்தால் வெள்ள நீர் எளிதில் வடிவதற்கு கொள்ளிடம் ஆறு முக்கிய பங்கு வகிக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அப்பகுதியில் பாதிப்பு ஏற்படாத வகையில் மழை நீர் எளிதில் வடிவதற்கு கொள்ளிடம் ஆறு வசதியாக உள்ளது.
படுகை கிராமங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் படுகை கிராமங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் 12 கிராமங்களும் கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் தென் கரையில் 9 கிராமங்களும் ஆற்று படுகையில் உள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பனங்காட்டங்குடி, வடரங்கம், மாதிரவேளூர், சோதியக்குடி, கொன்னக்காட்டு படுகை, சரஸ்வதி விளாகம், சந்தப் படுகை, நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல், கோரை திட்டு, ஆகிய கிராமங்களில் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
வௌ்ள பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கரையை ஒட்டி படுகை கிராமங்களாக ஜெயங்கொண்டபட்டினம், இளந்திரமேடு, மேல குண்டலபாடி, கீழகுண்டலபாடி, பருத்திக்குடி, புளியங்குடி, ஒற்ற பாளையம் உள்ளிட்ட படுகை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அதிக அளவில் பாதிக்கப்படும் கிராமங்களாக நாதல்படுகை, முதலைமேடு திட்டு, கோரைத்திட்டு, வடரங்கம், பாலுரான்படுகை ஆகிய படுகைகிராமங்கள் உள்ளன.
வீடுகளின் பரிதாப நிலை
இந்த கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகும் போது மக்கள் தங்கள் உடைமைகளுடன் படகில் பாதுகாப்பாக இடங்களுக்கு சென்று அடைக்கலம் புகுகிறார்கள். இதனால் வௌ்ளக்காலங்களில் மேற்கண்ட படுகை கிராம மக்கள் மிகுந்த இன்னல்களை சந்திக்கிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் முதியவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கும்.சாதாரண கூரை வீடுகளில் வசிக்கும் இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்களை சேகரித்துக்கொண்டு படகில் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் புகுந்தாலும் வெள்ளம் வடிந்த பின் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து பார்க்கும் போது வீடுகளின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கும். குறிப்பாக வீடுகளுக்குள் பாம்பு, தேள் போன்ற விஷஜந்துக்கள் அதிக அளவில் இருக்கும். இதனால் இரவு முழுவதும் மக்கள் மிகுந்த அச்ச உணர்வுடன் தூங்குகிறார்கள்.
கருங்கல் பாறை
எனவே அப்பகுதி மக்கள் தாங்கள் வசிக்கும் படுகை கிராமங்களுக்கு ஆற்று நீர் புகாமல் தடுக்கும் வகையில் கருங்கல் பாறை கொட்டப்பட்டு தடுப்பு அரண் அமைக்க வேண்டும். மேலும் அரசு சார்பில் படுகை கிராம மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும். குறிப்பாக திருக்கழிப்பாலை அளக்குடி இடையே கதவனை அமைக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிரந்தர தீர்வு
இது குறித்து முதலைமேடுதிட்டு கிராமத்தை சேர்ந்த பூவராகவன் கூறியதாவது:- கொள்ளிடம் ஆறு மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய ஆறாக விளங்கி வருகிறது. அளக்குடி என்ற கிராமத்தில் கொள்ளிடம் ஆறு ஆற்றின் கரையின் மீது மோதி வளைவதால் அப்பகுதியில் கரையில் உடைப்பு ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. பழையாறு கடலில் இருந்து பனங்காட்டங்குடி வரை 25 கிலோ மீட்டர் தூரம் உப்பு நீர் கொள்ளிட ஆற்றில் வந்து செல்கிறது.மேலும் இப்பகுதியில் அதிக அ ளவில் ஆற்று படுகை கிராமங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை இல்லாததால் உப்பு நீர் கிராமங்களை நோக்கி படையெடுத்து வரும் நிலை இருந்து வருகிறது.இதனால் படுகை கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாக மாறி வருகிறது. எனவே அரசு படுகை கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளித்து குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் படுகை கிராமங்களில் குடியிருப்பவர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டித்தர வேண்டும்
தடுப்புச்சுவர்
நாதல்படுகை கிராமத்தை சேர்ந்த சூரியமூர்த்தி:- கொள்ளிட ஆற்றின் வலது கரை பகுதியில் படுகை கிராமங்களில் பெண்கள் தங்கள் விளைநிலங்களை தோட்டப்பயிர்களான கத்திரி, வெண்டை, தக்காளி, மல்லி, வெங்காயம், முள்ளங்கி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். இவ்வாறு சாகுபடி செய்யும் காய்கறிகளை மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.கொள்ளிடம் ஆற்றில் உப்பு நீர் அதிகமாக வந்ததால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு சாகுபடி நிலப்பரப்பு குறைந்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் படுகை கிராம மக்கள் திடீரென ஏற்படும் வெள்ளத்தால் தம் தங்கள் உடமைகளை இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே படுகை கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் கரையோர பகுதிகளில் பொிய கருங்கல் பாறைகளை கொட்டி தடுப்புச்சுவா் கட்ட வேண்டும்.