திருத்துறைப்பூண்டி மரைக்காகோரையாற்றில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?


திருத்துறைப்பூண்டி மரைக்காகோரையாற்றில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?
x

திருத்துறைப்பூண்டி மரைக்காகோரையாற்றில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?

திருவாரூர்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு திருத்துறைப்பூண்டி மரைக்காகோரையாற்றில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முப்போக சாகுபடி

திருத்துறைப்பூண்டி விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள பகுதியாகும். வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வாய்க்கால்கள், ஆறுகள் தூர்வாரப்பட்டு முறையாக தண்ணீர் கடைமடை பகுதி வரை வந்தால் இங்கு குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக சாகுபடி நடைபெறும்.

சமீபகாலமாக முப்போக சாகுபடி இங்கு நடைபெறுவதில்லை. ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறந்தாலும் உரிய நேரத்தில் தண்ணீர் கடைமடை பகுதி வரை வருவதில்லை. அப்படியே தண்ணீர் வந்தாலும் பருவமழை அதிகமாக பெய்தாலும், வெள்ளம் ஏற்பட்டாலும் பயிர்கள் அழுகி நாசமாகும் சூழல் ஏற்படுகிறது.

மரைக்காகோரையாறு

திருத்துறைப்பூண்டி பகுதியில் மரைக்காகோரையாறு பாசனத்திற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தற்போது இந்த ஆற்றை ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்துள்ளதால் ஆறே இருப்பது தெரியவில்லை. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்தால் ஆகாயத்தாமரைகளால் தண்ணீர் செல்ல தடை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு மரைக்காகோரையாறை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?

இதுகுறித்து சமூக ஆர்வலர் தாஜுதீன் கூறுகையில்,

திருத்துறைப்பூண்டி விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்குவது மரைக்காகோரையாறு. தற்போது இந்த ஆற்றை ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்துள்ளதால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாமல் தடைபட்டுள்ளது. எனவே விவசாய பணிகளை தொடங்குவதற்கு முன்பும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பும் ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும். மேலும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு ஆற்றை அகலமாக தூர்வார வேண்டும். இதனால் விவசாய பணிகள் தடையின்றி நடைபெறும் என்றார்.


Next Story