மண் பாதைகளில் தார் சாலை அமைக்கப்படுமா?


மண் பாதைகளில் தார் சாலை அமைக்கப்படுமா?
x

மண் பாதைகளில் தார் சாலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

அரியலூர்

உடையார்பாளையம்:

விவசாய நிலங்கள்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் வளவெட்டிக்குப்பம் கிராமத்தில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் விவசாய நிலங்கள் தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், வெண்மான்கொண்டான் கிராமத்தின் எல்லையில் உள்ளது. அங்கு விவசாயிகள் இரண்டு பாதைகளின் வழியாக சென்று விவசாயம் செய்து வருகின்றனர். அதாவது செங்கால் ஏரியின் தென்புறம் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை மண் சாலையில் சென்றும், செங்கால் ஏரியின் கீழ்புறம் உள்ள மண் சாலை மற்றும் ஓடையின் வழியாக சென்றும் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த சாலைகளில் மழைக்காலங்களில் மாட்டு வண்டி, டிராக்டர் ஓட்டி செல்லும்போது மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும் விவசாய நிலங்களுக்கு தேவையான உரம், பூச்சி மருந்து மற்றும் இடுபொருட்கள் எடுத்து செல்லும்போது விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்

கோரிக்கை

மழைக்காலங்களில் இந்த சாலையில் மழை நீர் முழங்கால் அளவில் செல்லும்போது ஆடு, மாடுகளை அந்த வழியாக மேய்ச்சலுக்கு ஓட்டி செல்ல முடியாத நிலை உள்ளது. இது குறித்து சுமார் 10 ஆண்டுகளாக விவசாயிகள் மாவட்ட கலெக்டர், தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர், வெண்மான்கொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தத்தனூர் வளவெட்டிக்குப்பம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தத்தனூர் வளவெட்டிக்குப்பம் விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

காட்டாற்று வெள்ளம்

விவசாயி சண்முகம்:- பல தலைமுறையாக விவசாயிகள் இந்த மண் சாலையை பயன்படுத்தி வருகிறோம். தத்தனூர் வளவெட்டிக்குப்பம் செங்கால் ஏரியின் கீழ் புறம் தார் சாலையில் இருந்து கிழக்கே செல்லும் மண் சாலையின் இடையே காட்டாறு நீரோடை செல்கிறது. இந்த நீரோடையில் மழைக்காலங்களில் காட்டாற்று நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த சமயங்களில் நாங்கள் ஆடு, மாடுகளை வைத்துக்கொண்டு ரொம்பவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறோம். அதனால் செங்கால் ஏரியின் கிழக்குப் பகுதியில் காட்டாறு நீரோடையில் பாலம் அமைத்து, மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும்.

நடவடிக்கை இல்லை

விவசாயி உத்தமராசு:- தத்தனூர் வளவெட்டிக்குப்பம் தெற்கு தார் சாலையில் இருந்து கிழக்கே செல்லும் மண் சாலையில் செல்லும் வண்டி பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதனால் அந்த சாலையை தார் சாலையாக மாற்றி தரம் உயர்த்தி, மேலும் அந்த சாலையின் இடையே சருக்கு பாலம் அமைத்து தரும்படி கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் தாமதிக்காமல் இந்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

பாலம், தடுப்புச்சுவர்

விவசாயி இளையராஜா:- மண் சாலை மற்றும் வண்டி பாதையை தரம் உயர்த்தி, தார் சாலையாக மாற்றினால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் ஆடு மற்றும் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

விவசாயி ராஜேந்திரன்:- 2 சாலைகளும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை தான் மண் சாலையாக உள்ளது. எனவே அதனை தார் சாலையாக மாற்றி செங்கால் ஏரியின் தென் புறம் உள்ள சாலையில் ஒரு சருக்கு பாலமும், செங்கால் ஏரியின் கீழ்புறம் தார் சாலை அமைத்து, சாலை முடியும் பகுதியில் தடுப்பு சுவர் கட்டி தரும்படியும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இனியாவது எங்களது கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தனர்.


Next Story