சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுமா?
நரிக்குடி அருகே சுள்ளங்குடியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டி,
நரிக்குடி அருகே சுள்ளங்குடியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உப்பு படிந்த நீர்
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் நல்லுக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சுள்ளங்குடி கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம பொதுமக்கள் தெரு குழாயில் இருந்து வரக்கூடிய தண்ணீரை எடுத்து குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். தெரு குழாயிலிருந்து வரும் தண்ணீரை பாத்திரத்தில் பிடித்து வைத்தால் பானையின் அடியில் உப்பு படிந்துவிடுகிறது.
இந்த தண்ணீரில் உப்பு அதிகமாக இருந்து வருவதால் இந்த தண்ணீரை குடித்தால் நோய் பாதிப்பு ஏற்படும் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆதலால் தெரு குழாயில் வரும் தண்ணீரை யாரும் குடிக்காமல் தினமும் 5 கி.மீ. தூரம் உள்ள குறையறவாசித்தான் கிராமத்திற்கு நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
மக்கள் பாதிப்பு
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
சுள்ளங்குடி கிராமத்தில் உள்ள தண்ணீர் மிகவும் உப்பாக இருப்பதால் இந்த தண்ணீரை குடிப்பதால் அதிகமானவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே உடனடியாக சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் இந்த தண்ணீரை குடித்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.